20% போனஸ் கேட்டு குன்னூர் டான்டீ தலைமை அலுவலகத்தில் தொழிலாளர்கள் முற்றுகை

20 சதவீத போனஸ் வழங்கக் கோரி குன்னூரில்  டான்டீ தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
20 சதவீத போனஸ் வழங்கக் கோரி குன்னூரில் டான்டீ தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் டான்டீ தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கக் கோரி குன்னூரில் செயல்பட்டு வரும் டான்டீ தலைமை அலுவலகத்தை 200-க்கும் மேற்பட்ட தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் இன்று (அக்.28) முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் உட்பட 8 கோட்டங்களாக டான்டீ எனப்படும் அரசு தேயிலை தோட்ட கழகம் செயல்பட்டு வருகிறது. இவற்றில் ஆயிரக்கணக்கான தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.டான்டீ தொழிலாளர்களுக்கு தீபாவளிக்கு ஆண்டுதோறும் 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டு வருவது வழக்கம்.

இந்தாண்டு 10 சதவீத போனஸ் மட்டுமே வழங்கப்படும் என்று தெரியவந்த நிலையில், அதுவும் இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. இதைக் கண்டித்தும், 20 சதவீத போனஸ் வழங்கக் கோரியும் குன்னூரில் உள்ள டான்டீ தலைமை அலுவலகத்தை இன்று பெண்கள் மற்றும் ஆண்கள் முற்றுகையிட்டு அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையைப் புறக்கணித்து கலந்து கொண்டனர். போனஸ் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படாவிட்டால் தொழிலாளர்கள் நாளை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என ஏஐடியுசி தோட்ட தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in