தவெக மாநாடு: அதிகாலையில் சீரான போக்குவரத்து; டன் கணக்கில் தேங்கிய குப்பையால் துர்நாற்றம்

தவெக மாநாடு: அதிகாலையில் சீரான போக்குவரத்து; டன் கணக்கில் தேங்கிய குப்பையால் துர்நாற்றம்
Updated on
1 min read

விழுப்புரம்: விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு நேற்று பிரம்மாண்டமாக நடந்து முடிந்த நிலையில் மாநாட்டுக்கு வந்த வாகனங்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் இன்று (அக்.28) அதிகாலை 3 மணியளவில் தான் சரியானது. அதேபோல், மாநாட்டு திடலில் சுமார் 3 டன் அளவுக்கான குப்பைகள் சேர்ந்ததாலும், மீதமான உணவுகளை பொதுமக்கள் வீசிச் சென்றதாலும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் ‘வெற்றி கொள்கை திருவிழா’ என்ற பெயரில் நேற்று (அக்.27) மாலை 7 மணிக்கு நிறைவு பெற்றது. இம்மாநாட்டிற்கு 15,000 வாகனங்கள் வந்ததாகவும், சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்று இருக்க வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது.

மாநாடு முடிந்தவுடன் புறப்பட்ட வாகனங்கள் ஊர்ந்தபடி சுமார் 4 மணி நேரம் சென்றது. யூ-டர்ன் கூட போட முடியாமல் திருச்சி செல்ல வேண்டிய வாகனங்கள் திண்டிவனம் சென்று அங்கிருந்து மீண்டும் திரும்பி விழுப்புரம் வழியாக பயணித்தது. மாநாடு நடைபெற்ற வி.சாலை முதல் விழுப்புரம் வரையிலான 17 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 5 மணி நேரமானது. விழுப்புரத்திலிருந்து மாநாட்டு திடல் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அதிகாலை 3 மணிக்கு பின்பே போக்குவரத்து சீரானது.

விழுப்புரம் - திண்டிவனம் வழியாக காலை 5 மணி முதல் பொது போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. வி.சாலையிலிருந்து விழுப்புரத்துக்கு நடந்து வந்தவர்கள் 3 மணி நேரத்தில் வந்துவிட்டாலும், பைக்கில் வந்தவர்கள் வருவதற்கு 5 மணி நேரமானது. இதனால் இப்பகுதியில் மொபைல் பயன்பாடு அதிகரித்ததால் இணையதள சேவை முடங்கியது.

பேருந்துகளில் மாநாட்டிற்கு வந்தவர்கள் வி.சாலையிலிருந்து விக்கிரவாண்டி சுங்கச்சாவடிக்கு 6 கிலோ மீட்டர் நடந்து வந்து அங்கு பூட்டப்பட்டு கிடந்த உணவகங்களின் வாசல்களில் படுத்து தூங்கி எழுந்து, அதிகாலை இயக்கப்பட்ட பேருந்தில் தங்கள் ஊருக்கு பயணித்தனர்.

மாநாட்டு திடலில் லட்சக்கணக்கான காலி வாட்டர் பாட்டில்கள், உணவு தட்டுகள், குப்பைகள் என சுமார் 3 டன் அளவுக்கான குப்பைகள் இருந்தது. மீதமான உணவுகளை வீசியதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in