Published : 06 Jun 2018 09:26 AM
Last Updated : 06 Jun 2018 09:26 AM

ரூ.60 லட்சம் மதிப்பு பழைய ஆயிரம் ரூபாய் நோட்டு கோவையில் பறிமுதல்

கோவை அடுக்குமாடி குடியிருப்பில், மதிப்பிழப்பு செய்யப்பட்ட ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ரூ.60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை பீளமேட்டில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், மாத வாடகைக்கு அறைகள் கொடுக்கப்படுகின்றன. நேற்று முன்தினம் இக்குடியிருப்புக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர், தன்னுடைய பெயர் தஷ்தகிர் என்றும், நாமக்கல்லில் இருந்து பேசுவதாகவும், தன்னுடைய பெயரில் அறை ஒன்று புக்கிங் செய்து வைக்குமாறும் கூறியுள்ளார். அதன்பேரில் அவர் பெயரில் அறை பதிவு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இரவு 6 பேருடன் அறைக்கு வந்த தஷ்தகிர் சிறிது நேரத்தில் அறையை பூட்டிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

இதனால் சந்தேகம் அடைந்த அறை உரிமையாளர் மாற்றுச் சாவி மூலம் அறையைத் திறந்து பார்த்தபோது, அங்கு ஒரு பை இருந்தது. அதில் மதிப்பிழப்பு செய்யப்பட்ட ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்துள்ளன.

இதையடுத்து, தஷ்தகிர் கொடுத்திருந்த செல்போன் எண்ணில், வெங்கடேஷ் தொடர்பு கொண்டு, எப்போது அறைக்கு வருவீர்கள் என கேட்டபோது, மழுப்பலாக பதிலளித்துள்ளார். பல மணி காத்திருந்தும் அவர்கள் அறைக்கு வராததால், நேற்று காலை பீளமேடு போலீஸுக்கு தகவல் தெரிவித்தார். பீளமேடு காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான போலீஸார், மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை அறையிலிருந்து கைப்பற்றினர். போலீஸார் கூறும்போது, “அடுக்குமாடி குடியிருப்பு அறையில் இருந்து மதிப்பிழப்பு செய்யப்பட்ட ஆயிரம் ரூபாய் நோட்டுகள், 60 கட்டுகள் (ரூ.60 லட்சம்) கைப்பற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான தஷ்தகிரை தேடி வருகிறோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x