Published : 21 Jun 2018 09:35 AM
Last Updated : 21 Jun 2018 09:35 AM

கடம்பூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிணற்றில் விழுந்த 3 யானைகளை மீட்டது வனத்துறை

கடம்பூர் வனப்பகுதியில் தீவனம் தேடி வந்த 3 யானைகள் கிணற்றில் தவறி விழுந்தன. இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பின் யானைகள் மீட்கப்பட்டன.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள கானக்குந்தூர் கிராமம் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. வனப்பகுதியிலிருந்து வெளியேறும் காட்டுயானைகள் விவசாயிகளின் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது வழக்கம்.

50 அடி ஆழ கிணறு

இந்நிலையில் நேற்றிரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய 3 காட்டுயானைகள், குருசாமி என்ற விவசாயி தோட்டத்தில் நுழைந்தபோது, அங்கிருந்த 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தன. கிணற்றில் தண்ணீர் இருந்ததால் யானைகள் தண்ணீரில் தத்தளித்தன.

இதுகுறித்து கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சத்தியமங்கலம் வனச்சரகர் பெர்னாட் தலைமையிலான வனக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து யானைகள் கிணற்றிலிருந்து மேலே ஏறுவதற்கு ஏதுவாக, மண்ணைக் கொட்டி சாய்வுதளம் போல் பாதை ஏற்படுத்தினர். அதைத்தொடர்ந்து யானைகள் ஒன்றன்பின் ஒன்றாக கிணற்றிலிருந்து மேலே ஏறி வனப்பகுதிக்குள் சென்றன. குட்டியானை ஒன்று கிணற்றிலிருந்து ஏறுவதற்கு முயற்சித்தபோது, தாய் யானை தனது தும்பிக்கையால் தள்ளிக்கொடுத்து மேலே ஏற்றியது.

விவசாயிகளுக்கு வேண்டுகோள்

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது, வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய விளைநிலங்களில் உள்ள பெரும்பாலான கிணறுகளுக்கு சுற்றுச்சுவர் இல்லாமல் இருப்பதால், கிணற்றை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டிக் கிடக்கின்றன. இதனால் வனப்பகுதியை விட்டு பட்டா நிலத்துக்கு வரும் யானை, மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் கிணற்றில் தவறி விழுந்துவிடுகின்றன. இதில் சில வனவிலங்குகள் உயிரிழந்து விடுகின்றன. எனவே வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள கிணறுகளை சுற்றிலும் புதர்களை அகற்றி, தடுப்புசுவர் அல்லது தடுப்புக்கம்பிகளை விவசாயிகள் அமைக்க வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x