யூடியூபர் இர்ஃபான் வருத்தம் தெரிவித்து சுகாதாரத் துறைக்கு கடிதம்

யூடியூபர் இர்ஃபான் வருத்தம் தெரிவித்து சுகாதாரத் துறைக்கு கடிதம்
Updated on
1 min read

சென்னை: குழந்தையின் தொப்புள் கொடியை துண்டித்தபோது எடுத்த வீடியோவை பகிர்ந்த விவகாரத்தில் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககத்துக்கு யூடியூபர் இர்ஃபான் கடிதம் கொடுத்துள்ளார்.

தற்போது, இர்ஃபான் வெளிநாட்டில் இருப்பதால், உதவியாளர் மூலமாக கடிதத்தை இர்ஃபான் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், ‘நான் எந்தவித உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை. மருத்துவ சட்டங்களை மதிக்கிறேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சட்டத்துக்கு உட்பட்டு, இர்ஃபான் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, சென்னையைச் சேர்ந்த யூடியூபரான இர்ஃபான் - ஆசிபா தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. பிரசவ சிகிச்சையின்போது அறுவை சிகிச்சை அரங்கில் இருந்த இர்பான், அங்கிருந்த மருத்துவரின் அனுமதியுடன் தாய் மற்றும் குழந்தையின் தொப்புள்கொடியை கத்தரிக்கோலால் துண்டித்தார்.

இது தொடர்பான விடியோவை தனது யூடியூப் பக்கத்தில் இர்ஃபான் பதிவிட்டார். இது பெரும் சர்ச்சையானது. மருத்துவ விதிகளுக்கு புறம்பாக சம்பந்தப்பட்ட மருத்துவர், இர்ஃபான், மருத்துவமனை நிர்வாகம் செயல்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவர்கள் மீது மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

அதேநேரம், துறைரீதியான விசாரணையும் நடத்தப்பட்டு, மருத்துவமனை, இர்ஃபானுக்கு தனித்தனியே விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகம் அளித்த விளக்கம், ஏற்கும்படி இல்லாததால், தனியார் மருத்துவமனை அக்.24-ம் தேதி முதல் 10 நாட்களுக்கு செயல்பட தடைவிதித்தும், ரூ.50,000 அபராதம் விதித்தும் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் உத்தரவிட்டது. சம்பந்தப்பட்ட பெண் மருத்துவர் மீது தமிழக மருத்துவ கவுன்சிலும் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in