தீபாவளி: வடலூர் ஆட்டுச் சந்தையில் ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ஆடுகள் விற்பனை
ஆடுகள் விற்பனை
Updated on
1 min read

கடலூர்: கடலூரில் இன்று நடைபெற்ற வடலூர் ஆட்டுச் சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால் கால்நடை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் வடலூரில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த ஆட்டுச் சந்தைக்கு வடலூர் அதன் சுற்றுவட்டார பகுதியான குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, தம்பிப்பேட்டை, அரசகுழி, பண்ருட்டி, காடாம்புலியூர், கொள்ளுக்காரன்குட்டை, வடக்குத்து, மீன்சுருட்டி, மருவாய், கொலக்குடி, கம்மாபுரம், சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் வளர்த்து வரும் ஆடுகளை விற்பனைக்கு கொண்டுவருது வழக்கம்.

இந்த நிலையில் சனிக்கிழமையான இன்று வழக்கம்போல சந்தை நடைபெற்றது. இதில், வெள்ளாடு, கொடி ஆடு, செம்பரி ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்த ஆடுகளை வாங்குவதற்கு கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், திருச்சி, ராமநாதபுரம், கரூர், அரியலூர், மயிலாடுதுறை, தேனி, உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர்.

ஒரு ஆடு குறைந்தபட்சம் ரூ. 5 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ. 18 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் தீபாவளி சந்தை என்பதால் இன்று ஒரு நாள் மட்டும் வடலூர் ஆட்டுச் சந்தையில் ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றுள்ளது. ஆடுகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் கால்நடை விவசாயிகள் மகிழ்வுடன் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in