மதுரை இயல்பு நிலைக்கு திரும்ப போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் 

மதுரை இயல்பு நிலைக்கு திரும்ப போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் 
Updated on
1 min read

சென்னை: “கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மதுரை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இயல்பு நிலையைக் கொண்டு வரப் போர்க்கால அடிப்படையில் அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “மதுரை மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக, மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்து, உடனடியாக அங்கு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரை அனுப்பி வைத்தேன்.

மேலும், மதுரை மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு கள நிலவரம் குறித்து அறிந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளேன். குடியிருப்புப் பகுதிகளில் மழைநீரை வடிய வைக்க ராட்சத மின் மோட்டார்களும் பொறியாளர்களும் பணியாளர்களும் அருகில் உள்ள நகராட்சிகளில் இருந்து அனுப்பிவைக்கப் பட்டுள்ளனர்.

மருத்துவ முகாம்கள் 20 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தேவையான வசதிகளுடன் மூன்று முகாம்களில் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலர் நேற்றே அனுப்பிவைக்கப் பட்டுள்ளார்.

தலைமைச் செயலாளர் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ஆகியோர் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மதுரை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இயல்பு நிலையைக் கொண்டு வரப் போர்க்கால அடிப்படையில் அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in