‘‘மாபெரும் அரசியல் சரித்திரத்தை நாளை நிகழ்த்திக் காட்டுவோம்’’: தவெக தலைவர் விஜய்

விஜய்
விஜய்
Updated on
1 min read

சென்னை: “உங்களின் பாதுகாப்பான பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன். நீங்களும் அதை மனதில் வைத்தே வாருங்கள். அப்படித்தான் வரவேண்டும். நாளை நமது மாநாட்டில் சந்திப்போம். மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்” என தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் ஞாயிற்றுக்கிழமை (நாளை) நடைபெறுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் இந்த மாநாடு நடைபெற உள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகள் தீவரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாநாட்டுக்கு வரக்கூடிய தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டு விஜய் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பெயரைப் போல சில விசயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லியே ஆக வேண்டும். அப்படித்தான் கடிதங்களில் சொன்னதையே இங்கு மீண்டும் வலியுறுத்தப்போகிறேன்.

காரணம், எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம். ஆகவே,மாநாட்டுப் பயணப் பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். இருசக்கர வாகன பயணத்தை தவிர்த்தல் நன்று. உங்கள் பாதுகாப்புக் கருதியே இதைச் சொல்கிறேன். அதேபோல, வருகிற வழிகளில் பொதுமக்களுக்கோ போக்குவரத்திற்கோ இடையூறு செய்யாமல் வரவேண்டும்.

போக்குவரத்து நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதோடு, மாநாட்டுப் பணிக்கானக் கழகத் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பாதுகாவல் படைக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு, மாநாடு சார்ந்து காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். உங்களின் பாதுகாப்பான பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன். நீங்களும் அதை மனதில் வைத்தே வாருங்கள். அப்படித்தான் வரவேண்டும். நாளை நமது மாநாட்டில் சந்திப்போம். மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in