சென்னையில் வெள்ள அபாய முன்னறிவிப்பை துரிதமாக வழங்க ரூ.68 கோடியில் சிறப்புத் திட்டம் - தமிழக அரசு தகவல்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
2 min read

சென்னை: சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் மக்களுக்கு வெள்ளம் அபாயம் குறித்த தகவல்களை துரிதமாக வழங்க ரூ.68 கோடியில் நிகழ்நேர வெள்ளப் பெருக்கு முன்னறிவிப்பு திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக நீர்வளத் துறை செயலர் மணிவாசன் கூறியுள்ளார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் தென்னிந்திய பகுதிகளில் நீர்வளம் எதிர்கொண்டுள்ள சவால்கள், தீர்வுகள் தொடர்பாக கருத்தரங்கம் சென்னையில் இன்று (அக்.25) நடைபெற்றது. இதில் தென் மாநிலங்களை சேர்ந்த நீர் மேலாண்மை வல்லுநர்கள், அரசுத்துறை அலுவலர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று தங்கள் மாநிலங்களில் உள்ள நீர்வளம், மேலாண்மை தொடர்பான திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்த தகவல்களை பகிர்ந்துகொண்டனர்.

இதன் தொடக்க அமர்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக நீர்வளத் துறை செயலர் கே.மணிவாசன் பேசியது: “தமிழகத்தை பொறுத்தவரை 40 ஆயிரத்துக்கும் அதிகமான நீர்நிலைகள் இருக்கின்றன. நமக்கு நீர் மேலாண்மையில் 2 பிரச்சினைகள் உள்ளன. ஒன்று, தேவைப்படும் நேரங்களில் தேவையான நீர் கிடைப்பதில்லை. மற்றொன்று, மழை அதிகமாக பெய்வதால் வரும் வெள்ளம். இவற்றை சரிசெய்வதற்கான முயற்சிகளைத்தான் நாம் முன்னெடுத்து வருகிறோம்.

தற்போது எந்தெந்த இடங்களில் எவ்வளவு மழை பெய்கிறது என்பதை ஓரளவு துல்லியமாக கணிக்க முடிகிறது. எனினும், தென்மேற்கு பருவமழையைவிட, வடகிழக்கு பருவமழையை கணிப்பதில் சிரமம் 25 சதவீதம் அளவுக்கு மாறுபாடுகள் இருப்பதாக வானிலை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். காலநிலை மாற்றம், காற்று திசை மாற்றம் உட்பட பல்வேறு அம்சங்கள் அதற்கு காரணிகளாக கூறப்படுகின்றன.

இதனால் சில நேரங்களில் எதிர்பார்ப்பதைவிட அதிகமாக மழை பெய்கிறது. இல்லையெனில் மழை குறைந்து விடுகிறது. எனவே, துல்லியமாக கணிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதுதவிர சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் தொழில்நுட்பங்களின் உதவி கொண்டு நீர் மேலாண்மையை சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சுமார் ரூ.68 கோடி மதிப்பீட்டில் நிகழ்நேர வெள்ளப்பெருக்கு முன்னறிவிப்பு (Real time flood forecasting) எனும் திட்டம் நீர்வளத்துறை சார்பில் கொண்டுவரப்பட உள்ளது.

இதற்காக பிரத்யேக செல்போன் செயலியும் வடிவமைக்கப்பட உள்ளது. இந்த பணிகள் இன்னும் 3, 4 மாதங்களில் நிறைவு பெறும். இது செயல்பாட்டுக்கு வரும்போது சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் எவ்வளவு மழை பெய்தால், எந்தளவுக்கு தண்ணீர் தேங்கும், ஏரிகளில் உள்ள நீர் அளவு, வெள்ள அபாய எச்சரிக்கை உட்பட நிகழ்வு நேர தரவுகளை உடனுக்குடன் பொதுமக்களே அறிந்து கொள்ளலாம்.

இதுதவிர, சென்னை மாநகரத்தில் நீர் மேலாண்மை மற்றும் வெள்ளத் தடுப்பு பணிகளுக்கான ஒருங்கிணைந்த திட்டத்தை ஜப்பான் பன்னாட்டு நிதியுதவிடன் உருவாக்கும் முயற்சியில் தமிழக நீர்வளத்துறை 2 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளது. வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள முறையான ஆய்வு சார்ந்த திட்டமிடல் வேண்டும். துரிதகால, நீண்டகால நடவடிக்கைகள், மழை அளவை கொண்டு செய்ய வேண்டிய பணிகள், தண்ணீர் தேங்கும் பகுதிகளின் விவரம், அதை தடுப்பதற்கான வழிமுறைகள், கால்வாய்களை அகலப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அதில் இடம் பெறவுள்ளன.

உதாரணமாக, கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரம் பகுதியை அகலப்படுத்துவது, பக்கீங்காம் கால்வாயை கூடுதலான இடங்களில் வங்கக்கடலில் இணைப்பது போன்றவை இந்த திட்டத்தில் இடம்பெறும். அதேபோல், வேளாண் பணிகளுக்கும் அதிகளவிலான தண்ணீர் தேவையுள்ளது. அவற்றையும் முறைப்படுத்த திட்டமிட்டு வருகிறோம். குறைந்த அளவிலான தண்ணீரில் அதிக விளைச்சல் தரும் சந்தைப்படுத்தக்கூடிய பயிர்களை கண்டறிந்து அதை விவசாயிகள் பயிர்செய்ய ஊக்கப்படுத்துவதற்காக நடவடிக்கைகள் மேற்கொளளப்பட உள்ளன. இதற்கான பணிகளை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் இணைந்து மேற்கொள்ள இருக்கிறோம்.

மேலும், மழைநீர் சேமிப்பு திட்டத்தை வலுப்படுத்துவதற்கான பணிகளும் தொடர்புடைய துறைகள் மூலமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஏற்கெனவே நீர்நிலைகளில் உள்ள பல்வேறு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. ஜிபிஎஸ் உதவியுடன் நீர்நிலைகளின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு வருகின்றன. நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை இதன்மூலம் கண்டறிந்து அகற்றவும், புதிய ஆக்கிரமிப்புகள் வராமல் தடுக்கவும் முடியும். மேலும், கடந்த ஆண்டு மழை பாதிப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு ரூ.630 கோடியை நிரந்தர வெள்ள தடுப்புப் பணிகளுக்கு வழங்கியுள்ளது. இதன்மூலம் ஆறுகள், கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன” என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in