

அபாய நிலையில் இருக்கும் மாநகராட்சி பள்ளி சுற்றுச்சுவரை இடித்துவிட்டு, புதிதாக கட்டித் தர வேண்டும் என பெரம்பூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பூரில் உள்ள வார்டு 71-ல் குருமூர்த்தி கார்டன் தெரு இருக்கிறது. இதில் மாநகராட்சிக்கு சொந்தமான பெண்கள் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழும் அபாய நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர். அதனை முற்றிலுமாக இடித்துவிட்டு, முழுமையாக கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக பெரம்பூர் சுற்றுவட்டார மேம்பாட்டுக் குழுவின் அமைப்பாளர் ரகுகுமார் சூடாமணி கூறியதாவது: சேதமடைந்த மாநகராட்சி பள்ளி மட்டுமின்றி, பெரும்பாலான இடங்களில் சுற்றுச்சுவருக்கு அருகில் கட்டிடக் கழிவை கொட்டி, மட்டத்தை உயரச் செய்கின்றனர். அதன்பின்னர் அதற்கு மேல் மரத்தை நட்டு வளர்க்கின்றனர். அல்லது குப்பைகளில் தானாகவே செடி, கொடி முளைத்து வேர் விடத் தொடங்கிவிடுகிறது.
அதன் பின்னர் மரத்தின் வேர் ஆழமாக சென்று சுவரின் கட்டுமானத்தை வலுவிழக்கச் செய்கிறது. இது ஒருபுறமிருக்க, பள்ளி சுவரின் கீழ் நடைபாதையை ஆக்கிரமித்து, மாடுகளை கட்டி வைத்திருந்தனர். இது ஆக்கிரமிப்பு என்பதை விட, சுவர் பலவீனமாக இருப்பதால் மாடுகளின் உயிருக்கு ஆபத்து என்றும், அப்பகுதியில் மக்களையே நடமாட வேண்டாம் எனவும் பல முறை கூறி வந்தோம். இது தொடர்பாக மாநகராட்சிக்கும் பல முறை புகாரளித்துள்ளோம்.
இதற்கிடையே, கடந்த 12-ம் தேதி பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்துவிழுந்து 3 மாடுகள் உயிரிழந்தன. அதிர்ஷ்டவசமாக பள்ளி விடுமுறை என்பதால் மாணவிகளுக்கோ, அப்பகுதியில் சென்ற பொதுமக்களுக்கோ பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. எனினும், ஆபத்தை அறிந்து மாநகராட்சியும், மாட்டின் உரிமையாளரும் செயல்பட்டிருந்தால் மாடுகளின் உயிர் பறிபோயிருக்காது. அங்கு அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகாலும் சீரான முறையில் இல்லை. தற்போது சுவர் இடிந்து விழுந்த இடம், தடுப்புகள் கொண்டு மறைக்கப்பட்டுள்ளது.
எனினும், சுவரின் மீதமுள்ள பகுதி அப்படியே இருக்கிறது. அதுவும் வலுவிழந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழும். இதேபோல் தான் பெரம்பூர் ரயில் நிலையசுற்றுச்சுவரும் அண்மையில் இடிந்துவிழுந்தது. அப்போது அங்கு சிறுநீர் கழித்துக் கொண்டிருந்த நபர் மீது சுவர்விழுந்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்துக்கும் சுவரின் உயரத்துக்கு கட்டிடக் கழிவை கொட்டி வைத்ததே காரணம். இதுபோன்ற சுற்றுச்சுவரை முழுமையாக இடித்து அகற்றிவிட்டு, புதிதாக சுவர் அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் சுற்றுச்சுவரை முழுமையாக இடித்துவிட்டு, தடுப்புகள் அமைத்தால் கூட போதும். அச்சமின்றி சுவரின் அருகே நடமாட முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, "மாநகராட்சி பள்ளியின் சுற்றுச்சுவரைபுதிதாக அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து வருகிறோம். இதற்கான ஒப்புதல் கிடைத்து, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன் சுவரை இடித்து புதிதாக கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படும்" என்றனர்.