

சென்னை:“விஜய்யின் தவெக மாநாட்டுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் தமிழக அரசு முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும்,” என தமிழக பாஜக வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் இன்று (அக்.25) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு ஞாயிற்றுக்கிழமை மாலை விழுப்புரத்தில் நடக்கிறது. இந்த மாநாட்டுக்கு எந்தவித இடர்பாடும் இல்லாமல், தமிழக அரசு முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்ய வேண்டும். ஊழல் கட்சிகளுக்கு, ஆட்சிகளுக்கு முடிவுகட்ட வேண்டும் என்கிற குறிக்கோளுடன் அரசியலுக்கு வருகிறேன் என்று நடிகர் விஜய் அரசியல் அறிவிப்பை முதலில் வெளியிட்டார்.
நடிகர் விஜய் அரசியல் அறிவிப்பு வெளியிட்ட போதும், தமிழக வெற்றி கழகம் ஆரம்பிக்கப்பட்ட போதும், முதலில் வரவேற்று விஜய் முடிவை வாழ்த்தி மகிழ்ந்தது தமிழக பாஜக தான். தமிழக மக்களுக்கும் ஒரு மாற்று அரசியல் வேண்டுமென்ற அடிப்படையில், விஜய் நிச்சயம் ஊழல் அரசியல் கட்சிகளை விரட்டி அடிப்பார். நடிகர் விஜய் தமிழக அரசியலில் மிக கவனமாக செயல்பட்டு வெற்றிப் படிகளில் ஏற வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக தவறான விமர்சனங்களை முன் வைத்தது போல், எதிர்காலத்தில் செயல்படாமல் மத்திய மாநில அரசின் திட்டங்களை ஆராய்ந்து மக்கள் நலனுக்கு உகந்த வழியில் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.
வாக்கு வங்கி அரசியலுக்காக இந்து மதத்தை இகழ்ந்தும், இஸ்லாமிய, கிறிஸ்துவ மதங்களை புகழ்ந்தும், சனாதன தர்மம் என்றால் என்னவென்றே தெரியாமல், அறியாமல் புரியாமல், அரசியல் லாபத்துக்காக, விளம்பரத்துக்காக அவதூறு பிரச்சாரம் செய்யும் கீழ்த்தரமான அரசியலையும் விஜய் புறம் தள்ள வேண்டும். தமிழக வளர்ச்சிக்கும் தமிழக மக்களின் மகிழ்ச்சிக்கும் வலிமை சேர்க்கும் வகையில் நேர்மறை அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து புதிய அரசியல் பாதையை உருவாக்கி உலகம் போற்றும் முன்மாதிரி அரசியல் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் விளங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்,” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, “உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு, உலகமே உற்று நோக்கிப் போற்றும் விதமாகக் கொண்டாடுவோம் நம் வெற்றிக் கொள்கைத் திருவிழாவை. மாநாட்டுக்கு வரும்போது பாதுகாப்பையும், கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி, பத்திரமாக வாருங்கள். நம் கழகக் கொடியைக் கைகளிலும் மனங்களிலும் ஏந்தி வாருங்கள்,” என்று தவெக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. | வாசிக்க > ‘2026 என்ற இலக்கை நோக்கி முதல் அடியை எடுத்து வைப்போம்’ - தவெக தொண்டர்களுக்கு விஜய் கடிதம்