

தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
புலன் விசாரணையில் மிகச்சிறப்பான பணியை அங்கீகரிக்கும் வகையிலும், ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு பதக்கங்களை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 10 பேருக்கு தமிழக முதல்வரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணி பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது.
திருப்பூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லோ.பாலாஜி சரவணன், நாமக்கல் மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் பி.ஆரோக்கியராஜ், திருச்சி மாவட்டம் துறையூர் காவல் வட்ட ஆய்வாளர் ம.தினேஷ்குமார், திருப்பூர் அனுப்பர்பாளையம் காவல்நிலைய ஆய்வாளர் எஸ்.சையத்பாபு, கடலூர் மாவட்டம் பண்ருட்டி காவல்நிலைய ஆய்வாளர் எஸ்.சிவசுப்பு, கோவை மாநகர குற்றப்பிரிவு ஆய்வாளர் எம்.கனகசபாபதி, கோவை மாநகர பீளமேடு காவல்நிலைய ஆய்வாளர் ஜெ.கி.கோபி, மதுரை மாநகர திலகர் திடல் காவல்நிலைய ஆய்வாளர் கே.டி.ராஜன்பாபு, கோவை மாநகர பி-11 காவல்நிலைய ஆய்வாளர் செ.சந்திரமோகன், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா காவல்நிலைய சார்பு ஆய்வாளர் எஸ்.மீனாட்சிசுந்தரம் ஆகிய 10 பேருக்கு காவல் புலன் விசாரணைக்கான சிறப்பு பணிப் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது.
சிறந்த பொது சேவைக்கான முதல்வரின் காவல் பதக்கம் தனிப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர்கள் மோ.பாண்டியன், அர.அருளரசு ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது. விருதுகள் பெறும் ஒவ்வொருவருக்கும் தலா 8 கிராம் தங்கப் பதக்கமும் ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.