

சென்னை: இஓஎஸ்-06 மற்றும் இன்சாட் 3டிஆர் செயற்கைக்கோள்கள் வங்கக்கடலில் நிலவும் டானா புயலை தொடர்ந்து கண்காணித்து தகவல்களை வழங்கி வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் அதிதீவிர புயலாக நிலவும் டானா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கடற்கரையில் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதற்கிடையே கடந்த அக்டோபர் 20-ம் தேதி கடலில் புயல் சின்னம் உருவானது முதல் அதன் மாற்றங்கள், திசை, பாதிப்புகள் மற்றும் அது தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்களை வானிலை ஆய்வு மையத்துக்கு இஸ்ரோ அளித்து வருகிறது.
புவி கண்காணிப்புக்காக செலுத்தப்பட்ட இஓஎஸ்-06 மற்றும் இன்சாட் 3டிஆர் ஆகிய செயற்கைக்கோள்கள் தற்போது புயல் கண்காணிப்பு பணிகளில் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவை 2 செயற்கைக்கோள்களும் நிகழ்நேர தரவுகளையும், புள்ளி விவரங்களையும் துல்லியமாக வழங்கி வருவதாக இஸ்ரோ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.