ஜனவரி இறுதியில் பயன்பாட்டுக்கு வருகிறது தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்!

தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் உட்புற தோற்றம் |  படங்கள்: எம்.பிரபு
தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் உட்புற தோற்றம் | படங்கள்: எம்.பிரபு
Updated on
2 min read

சென்னை: தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலில் பல கட்ட சோதனை முடிந்து, வரும் ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது என்று சென்னை ஐ.சி.எஃப் பொதுமேலாளர் சுப்பாராவ் தெரிவித்தார்.

நெடுந்தொலைவுக்கு இரவு நேரத்தில் வந்தே பாரத் ரயில்களை இயக்கும் விதமாக, தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் தயாரிக்கும் பணி பெங்களூரில் உள்ள பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் உள்ள ரயில் பெட்டி தயாரிப்பு ஆலையில் கடந்த ஆண்டு தொடங்கி, செப்டம்பர் மாதத்தில் முடிந்தது. தொடர்ந்து, சென்னை ஐ.சி.எஃப் ஆலைக்கு அனுப்பி, பல கட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், சென்னை ஐ.சி.எஃப். பொதுமேலாளர் சுப்பாராவ், தூங்கும் வசதி கொண்ட முதல் வந்தே பாரத் ரயிலை ஆய்வு செய்தார். பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: “தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் ஆய்வு பணிகள் நவ.15-க்குள் முழுமையாக முடிவடையும். அதன்பிறகு, லக்னோவுக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலைகள் அமைப்பு மீண்டும் இந்த ரயிலை ஆய்வு செய்யும்.

பல கட்ட சோதனைகள் அங்கு நடக்கும். 180 கி.மீ வேகத்தில் சோதனை நடத்தி இந்த ரயில் பரிசோதிக்கப்படும். முழுமையான சோதனைகள் நடத்தப்பட்டு, வரும் ஜன.15-ம் தேதி ரயில்வே வாரியத்திடம் ரயில் ஒப்படைக்கப்படும். அதன்பின்னர் எந்த வழித்தடத்தில் ரயிலை இயக்குவது என்று ரயில்வே வாரியம் முடிவு செய்யும். இந்த ரயில் வரும் ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். இந்த வந்தே பாரத் ரயில் அதிகபட்சமாக 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பகல் நேரம் அல்லாமல் இரவு நேரத்தில் நீண்ட தூரம் பயணிப்பவர்களுக்காக, இந்த தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோல, தூங்கும் வசதி கொண்ட 50 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக 10 ரயில்கள் தயாரிக்கப்படும்” என்று அவர் கூறினார்.

சென்னை ஐ.சி.எஃப் பொதுமேலாளர் சுப்பாராவ்
சென்னை ஐ.சி.எஃப் பொதுமேலாளர் சுப்பாராவ்

16 பெட்டிகளை கொண்ட இந்த வந்தே பாரத் ரயிலில் மொத்தமாக 823 பேர் பயணம் மேற்கொள்ளலாம். அனைத்து பெட்டிகளும் தூங்கும் வசதி கொண்டவை.முதல் வகுப்பு ஏசி பெட்டியில் 24 பேர் பயணம் மேற்கொள்ள முடியும். இரண்டடுக்கு ஏசி பெட்டிகள் 4 உள்ளன. இவற்றில் 188 பேர் பயணம் மேற்கொள்ளலாம். மூன்றடுக்கு ஏசி பெட்டிகள் 11 உள்ளன. இவற்றில் 611 பேர் பயணம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in