

மதுரை: தமிழகத்தில் மூத்த குடிமக்கள், பெற்றோர் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக அமல்படுத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை புதுமாகாலிப்பட்டியைச் சேர்ந்த மணிபாரதி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “பல மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர்கள் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் தனிமையில் உள்ளனர். இதனால் மூத்த குடிமக்கள் பல்வேறு விதமான பாதிப்புகளையும், பாதுகாப்பின்மை மற்றும் சமூக விரோதிகளால் பல்வேறு தொந்தரவுகளையும் சந்தித்து வருகின்றனர். மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர்களை பாதுகாக்கவும், பராமரிக்கவும் தனிச்சட்டம் உள்ளது. பின்னர் 2009-ல் தமிழ்நாடு மூத்த குடிமக்கள், பெற்றோர் நலன் மற்றும் பராமரிப்பு விதிகள் கொண்டு வரப்பட்டன.
இந்த விதிமுறைகளின்படி ஒவ்வொரு காவல் நிலைய அதிகாரிகளும் தங்களின் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மூத்த குடிமக்களின் நலனை தினசரி பராமரித்து தங்களின் உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்பிக்க வேண்டும். குறிப்பாக, குழந்தைகள் மற்றும் உறவினர்களின் ஆதரவின்றி தனியாக வாழும் மூத்த குடிமக்களை கட்டாயமாக கண்காணித்து அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.ஒவ்வொரு மூத்த குடிமக்களையும் அந்த எல்லைக்கு உட்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் மாதம் ஒருமுறையாவது நேரில் சந்தித்து அவர்களிடம் ஏதேனும் முறையீடுகள் இருக்கும் பட்சத்தில் அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
தனியாக வாழும் மூத்த குடிமக்களை தினசரி பாதுகாப்புக்காக தனது காவல் நிலையத்தில் தனிக்குழு ஏற்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.இருப்பினும் இந்த விதிமுறைகளை எந்த காவல் நிலையங்களிலும், எந்த மாநகர் காவல் ஆணையர் அலுவலகங்களிலும், எந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களிலும் பின்பற்றப்படவில்லை. எனவே மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர்களுக்கான பாதுகாப்பற்ற சூழல் தொடர்கிறது. பல்வேறு இடங்களில் தனியே வசிக்கும் மூத்த குடிமக்களை சமூக விரோதிகள் பல வழிகளில் தொந்தரவு செய்கின்றனர். வழிப்பறி, கொலை, கொள்ளை போன்ற பல அபாயமான நடைமுறைகளுக்கு பெரியவர்கள் ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, தமிழக அரசின் மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு விதிகளை அனைத்து மாவட்ட காவல் ஆணையர் அலுவலகங்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையங்களில் நடைமுறைப்படுத்தவும், மூத்த குடிமக்களின் நலனுக்கான அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட வேண்டும்.” எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல். விக்டோரியா கெளரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர், மனு தொடர்பாக தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.