

சென்னை- சேலம் எட்டு வழி பசுமை விரைவுச்சாலை அமைக்கும் திட்டம் குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு தேசிய நெடுஞ்சாலை ஒழுங்குமுறை ஆணையம் சமர்ப்பித்த அறிக்கையில் சீன நகரத்தின் பெயர் இடம்பெற்றுள்ளது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
ஏற்கெனவே இத்திட்டத்திற்கு தமிழகத்தின் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமூக நல ஆர்வலர்களும் எதிர்க்கட்சியினரும் போராட்டத்தில் குதித்துள்ளன.
இந்நிலையில், இந்த அறிக்கையில் சீன நகரத்தின் பெயர் இடம்பெற்றிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அந்த அறிகையில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் இதுதான்: "ஸி பகுதியை பெண்கள் அதிகமாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். எனவே, இந்த எக்ஸ்பிரஸ்வே இத்திட்டத்தை நிறைவேற்றுவதால் தரமான பாதுகாப்பான அதிகமான போக்குவரத்து சேவையை உறுதி செய்ய முடியும்"
இவ்வாறு அந்தப் பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஸி என்று குறிப்பிடப்பட்டுள்ள நகரம் சீனாவின் ஷான்ஷி மாகாணத்தில் இருக்கிறது. இந்த குறிப்பட்ட வாசகம் சீனாவின் பாலின மற்றும் வளர்ச்சி அறிக்கையிலிருந்து எடுத்துக் கையாளப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இந்த சர்ச்சை வாசகம் அடங்கிய அறிக்கையை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு ஃபீட்பேக் இன்ப்ரா பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் கன்செல்டன்ட் நிறுவனம் தயாரித்துக் கொடுத்துள்ளது.
சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு தாக்கல் செய்யப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிக்கையில் Terms of Reference என்ற தலைப்பின் கீழ் இடம்பெற்றுள்ளது. அதில் இந்தப் பகுதியில் அல்லது கிளைப்பகுதியில் திட்டம் சார்ந்த பாலின பிரச்சினைகள் என்ன? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு அளிக்கப்பட்ட பதிலில், "இத்திட்டம் நகர்ப்புற சாலை கட்டமைப்பை மேம்படுத்தும். பொது போக்குவரத்தையும் மேம்படுத்தும். இதனால் பெண்களும் ஆண்களும் சரிசமமாக பயனடைவர். ஸி பகுதியில் பெண்களின் போக்குவரத்து அதிகமாக இருக்கிறது. எனவே இத்திட்டத்தை நிறைவேற்றுவதால் தரமான பாதுகாப்பான அதிகமான போக்குவரத்து சேவையை உறுதி செய்ய முடியும்" எனக் கூறப்பட்டிருக்கிறது.
இது குறித்து தி இந்து ஆங்கிலம் சார்பில் ஈட்பேக் இன்பரா நிறுவனத்தைத் தொடர்பு கொண்டபோது சேர்மனை தொடர்பு கொள்ள இயலவில்லை விரைவில் அழைக்கிறோம் என்று கூறிமுடித்துள்ளனர்.
பொதுமக்களிடம் ஆலோசனை!
மேலும், தனியார் நிறுவனம் தயார் செய்து கொடுத்த அறிக்கையில் பொதுமக்களிடம் சென்னை - சேலம் எக்ஸ்பிரஸ்வே குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகளிடம் நேர்காணல் நடத்தப்பட்டது என்றும் ஏற்கெனவே தயார் செய்து வைக்கப்பட்ட கேள்விகளுக்கு எக்ஸ்பிரஸ்வே அமையும் பகுதியில் வசிக்கும் மக்களிடமிருந்து பதில் பெறப்பட்டது என்றும் அந்த தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மக்களிடம் ஆலோசனை கேட்டபோது அரசியல் குழப்பங்களால் இத்திட்டம் நின்றுவிடக்கூடாது என்றும் மீண்டும் மீண்டும் சர்வேக்கள் நடத்துவதைத் தவிர்த்து அவசரம் கருதி உடனடியாக திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராம், "சேலம்-சென்னை எக்ஸ்பிரவே குறித்து தொழில்நுட்ப ரீதியாக அனைத்து ஆய்வுகளும் மதிப்பீடுகளும் தரமாக செய்யப்பட்டுள்ளன. அதேவேளையில் சமூக மதிப்பீடுகளும் முழு வீச்சில் செய்யப்பட்டிருக்க வேண்டாமா?
பொதுமக்களுடன் ஆலோசனை நடத்தி கருத்து கேட்கப்பட்டிருந்தால் அது குறித்த தகவல்கள் அறிக்கையில் இடம் பெற்றிருக்க வேண்டுமே. எனவே, மக்களிடம் கருத்து கேட்டதாக அந்த நிறுவனம் சொல்வதே பொய்" என்றார்.