Published : 23 Oct 2024 06:56 AM
Last Updated : 23 Oct 2024 06:56 AM
சென்னை: உயிருடன் இருக்கும்போது முறையாக பதிவு செய்தவரின் கண் மற்றும் உடலை அவரது இறப்புக்கு பிறகு அவர்களின் உறவினர்கள் ஒப்புதல் இல்லாமல் தானம் பெறும் வகையில் சட்டத்திருத்தம் வரவுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
உயிருடன் இருக்கும்போது சுயநினைவுடன் ஒருவர் தனது இறப்புக்கு பின்னர், கண்களை தானம் கொடுப்பதாக பதிவு செய்திருந்தாலும், அவர் இறந்த பின்னர், அவரது கண்களை தானம் அளிக்க பெரும்பாலான உறவினர்கள் முன்வருவதில்லை. இதனால், போதிய கண்கள் தானமாக கிடைப்பதில்லை. இதன் காரணமாக ஆண்டுதோறும் பார்வையற்றவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கண் தானம் குறித்து மத்திய, மாநில அரசுகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. இருப்பினும் பலன் முழுமையாக கிடைக்கவில்லை.
இந்நிலையில், மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்று சட்டம்-1994 சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இறந்தநபர் உயிருடன் இருக்கும்போது கண் தானம் செய்வதாக பதிவுசெய்து இருந்தாலும், உறவினர்களின் ஒப்புதல் கட்டாயமாகும்.
இந்தச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும்பட்சத்தில், இறந்த நபர்உயிருடன் இருக்கும்போது கண்களை தானம் செய்வதாக விருப்பம் தெரிவித்து பதிவு செய்திருந்தால், உறவினர்களின் ஒப்புதல் இல்லாமல் இறந்தவர்களின் கண்களைதானமாக பெற முடியும். அதேபோல ஒருவர் உயிருடன் இருக்கும்போது தனது இறப்புக்கு பின்னர் உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்குவதாக விருப்பம் தெரிவித்து பதிவு செய்து இருந்தால், உறவினர்களின் ஒப்புதல் இன்றி உடலை மருத்துவக் கல்லூரியால் பெற்றுக் கொள்ள இயலும். இதை நடைமுறைப்படுத்தும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இதுதொடர்பாக இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) முன்னாள்தலைவர் ஜெ.ஏ.ஜெயலால் கூறியதாவது: உயிருடன் இருக்கும்போது சுயவிருப்பத்தின்படி இறப்புக்கு பின்னர் கண்கள், உடலை தானம் செய்வதாகவும் பதிவு செய்தவர்கள் இறந்துவிட்டால், அவர்களது உறவினர்கள் உறுப்புகளை தானம் செய்ய முன்வருவதில்லை. இறந்தவர் பதிவு செய்துள்ளார் என்றாலும் பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.
அதனால், பதிவு செய்தவர்களின் கண்கள், உடலை உறவினர்களின் ஒப்புதல் இல்லாமல் தானம் பெறும்வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசுமுடிவு செய்துள்ளது. மருத்துவமனைகளில் இறப்பவர்கள் பதிவு செய்துள்ளாரா இல்லையா என்பதை எளிதாக கண்டறிந்து கண்கள்,உடலை தானம் பெற முடியும்.வீடுகளில் இயற்கை மரணம் அடைபவர்கள் பதிவு செய்துள்ளாரா இல்லையா என்பது குறித்து கண்டறிவது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனை நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT