Published : 23 Oct 2024 05:44 AM
Last Updated : 23 Oct 2024 05:44 AM
சென்னை: சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்க கூட்டுறவு சங்கம்மூலமாக டெண்டர் விட அனுமதிஅளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டரில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், நியாயமான முறையில் டெண்டரை நடத்தஉத்தரவிட வேண்டும் என கோரிசென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச் சங்கத்தின் தலைவரான நடராஜன், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கு மனுவில், ‘தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டர் அறிவிப்பாணையில் சுற்றுலா கழகத்தின் நிர்வாக இயக்குநரே டெண்டர் தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெண்டரை மாற்றியமைக்கவும், விண்ணப்பத்தை எந்த காரணமுமின்றி ஏற்பதற்கும், நிராகரிப்பதற்கும் நிர்வாக இயக்குநருக்கு முழு அதிகாரம் உள்ளது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிபந்தனைகளை நீக்கி, அக்.18 முதல் நவ.1 வரை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான திருத்தப்பட்ட டெண்டரை வெளியிட உத்தரவிட வேண்டும்’ என கோரப்பட்டிருந்தது.
50 பட்டாசு கடைகள்: இந்த வழக்கு, நீதிபதி எம். தண்டபாணி முன்பாக விசாரணைக்குவந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ‘‘தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டர் நடவடிக்கைகளை ஏற்று நடத்தும் பொறுப்பு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திடமிருந்து கூட்டுறவுசங்கத்திடம் மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்தார். அத்துடன், கூட்டுறவு சங்கத்தின் இணைப் பதிவாளரும், திருவல்லிக்கேணி நகர்ப்புற கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குநருமான ஏ.முருகானந்தம் தரப்பில் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார்.
தீவுத்திடலில் மொத்தம் 50 பட்டாசு கடைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக எங்களது கூட்டுறவு சங்கம் சார்பில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு ரூ.82.50 லட்சம் செலுத்தப்பட உள்ளது. இதில் 4 கடைகள் மட்டும் கூட்டுறவு சங்கம் சார்பில் அமைக்கப்படும். எஞ்சிய 46 கடைகள் பட்டாசு விற்பனையாளர்களுக்கு ஒதுக்கப்படும்.
நாளை வெளிப்படையான டெண்டர்: இதற்கான டெண்டர், அக்.24-ம்தேதி (நாளை) பிற்பகல் 3 மணிக்கு தீவுத்திடலில் வெளிப்படையாக நடத்தப்படும். இதில் யார் அதிக தொகையை குறிப்பிட்டு டெண்டர் கோருகிறார்களோ அவர்களுக்கு பட்டாசு கடைகள் ஒதுக்கப்படும்.
அதன்படி, ஏ பிரிவில் 8 கடைகள் அமைக்க ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ. 2,25 லட்சமும், பி பிரிவில் 17கடைகள் அமைக்க தலா ரூ. 4 லட்சமும், சி பிரிவில் 15 கடைகள் அமைக்கதலா ரூ. 5.60 லட்சமும், டி பிரிவில் 10 கடைகள் அமைக்க தலா ரூ. 3 லட்சமும் குறைந்தபட்ச வாடகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் ஆனந்த், பட்டாசு கடைகள் அமைக்கப்படும் தீவுத்திடலில் மின்சாரம், தீயணைப்புத்துறை, கார் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளையும் செய்து தரஅரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரினார்.
அதையேற்ற நீதிபதி, தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டரை கூட்டுறவு சங்கமே ஏற்று நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT