Published : 23 Oct 2024 06:07 AM
Last Updated : 23 Oct 2024 06:07 AM
சென்னை: நாம் தமிழர் கட்சியை முன்னேற்றி அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல,தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானால் முடியாது என கட்சியில் இருந்து விலகிய முன்னாள் நிர்வாகிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறிய முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் செ.வெற்றிக்குமரன், நிர்வாகிகள் புகழேந்தி மாறன், சுப தனசேகரன் உள்ளிட்டோர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
நாம் தமிழர் கட்சியை, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சரியான முடிவுகளை எடுத்து முன்னோக்கி கொண்டு செல்வார் என்ற நம்பிக்கையில் அவருடன் பயணித்தோம். பல நேரங்களில் உடன்படாடு இல்லாவிட்டாலும் அமைதிகாத்து, பொறுமையுடன் பின்தொடர்ந்தோம். இதனால் எண்ணற்ற இழப்புகளை கடந்த 15 ஆண்டுகளில் சந்தித்திருக்கிறோம்.
கடந்த 2009-ல் தொடங்கப்பட்ட இயக்கம் தற்போது தான் அங்கீகாரம் பெற்ற கட்சியாக மாறியிருக்கிறது. இதுவே மிகப் பெரிய பின்னடைவு. நாம் தமிழர் கட்சியின் அரசியல் கோட்பாடு இந்த மண்ணில்நிலை பெற்றுவிட்டது. ஆனால் இதைஅடுத்த கட்டத்துக்கு முன்னேற்றிகொண்டு செல்வதற்கு இனி சீமானால் முடியாது. அந்த திறனும் பார்வையும் அவருக்கு இல்லை.
எனவே ‘தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம்’ என்ற பெயரில் புதிய அரசியல் அமைப்பை தமிழர் நலன் சார்ந்து உருவாக்கியிருக்கிறோம். முதல்கட்டமாக திருச்சியில் வரும் 27-ம் தேதி இலங்கை போரில் உயிர்நீத்த தமிழர்களுக்காக மாவீரர் நாள் நிகழ்ச்சியை நடத்துகிறோம். அதைத்தொடர்ந்து கலந்தாய்வு கூட்டம் நடத்தி எங்களது அரசியல் பயணம் தொடங்கும். நாம் தமிழர் கட்சியின் கொள்கை, கோட்பாடு எங்களால் உருவாக்கப்பட்டது. அதே கோட்பாட்டை ஜனநாயக முறையில் சரியாக எடுத்து செல்வதே இந்த அமைப்பின் நோக்கம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT