Published : 01 Aug 2014 12:00 AM
Last Updated : 01 Aug 2014 12:00 AM

வேளாண் உற்பத்தியை அதிகரிக்க நீர்வளப் பாதுகாப்புக்கு நடவடிக்கை: வேளாண் அமைச்சர் அறிவிப்பு

‘‘தமிழகத்தில் நீர்வளப் பாதுகாப்புக்கு ரூ.13 கோடி செலவிடப்படும். ஆயிரம் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் புனரமைக்கப்படும்’’ என்று வேளாண் துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

சட்டப்பேரவையில் வேளாண் துறை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வியாழக்கிழமை வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு:

உயர்தொழில்நுட்ப சாகுபடி முறைகளை மாதிரி பண்ணை அமைத்து விவசாயிகளுக்கு விளக் கும் வகையில் வெப்ப மண்டல பழ வகைகளுக்கான மகத்துவ மையம், திருச்சி மாவட்டம் ரங்கத்திலும், மலைத்தோட்ட காய்கறிகளுக்கான மகத்துவ மையம் ஊட்டியிலும் ரூ.9 கோடியில் அமைக்கப்படும்.

நீர்வளப் பாதுகாப்பை மேம்படுத்தி வேளாண் உற்பத்தியை உயர்த்த கருமண் அதிகம் காணப்படும் 7 மாவட்டங்களில் மண் அரிப்பைத் தடுத்து, மண் ஈரத்தை மேம்படுத்தும் வகையில் பகுதி வரப்புகள் ரூ.13.47 கோடியில் அமைக்கப்படும்.

இயந்திரங்களை வாடகைக்கு விடுவதற்காக 18 மாதிரி தொழில் முனைவோர் மையங்கள், ரூ.9.98 கோடியில் அமைக்கப்படும்.

விவசாயத்துக்கு அடிப்படை ஆதாரமான நீர்வளத்தைக் குறிப்பாக நிலத்தடி நீர்வளத்தை அதிகரிக்க, 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 1000 மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ரூ.3 கோடியில் புனரமைத்து நீர் சேமிப்புத் திறன் மேம்படுத்தப்படும்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் ரூ.4 கோடியில் எலுமிச்சை ஆராய்ச்சி நிலையம் நிறுவப்படும். ராமநாதபுரம் மாவட்டம் ஓரியூரில் ரூ.2.698 கோடியில் தோட்டக்கலைப் பண்ணை அமைக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x