Published : 03 Jun 2018 07:58 AM
Last Updated : 03 Jun 2018 07:58 AM

குரூப்-2 தேர்வு உட்பட 6 தேர்வுகளுக்கு ஜூன் 15-க்குள் அறிவிப்புகள் வெளியாகும்: டிஎன்பிஎஸ்சி அதிகாரி தகவல்

குரூப்-2 தேர்வு உட்பட 6 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் ஜூன் மாதம் 15-ம் தேதிக்குள் அடுத்தடுத்து ஒவ்வொன்றாக வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரி தெரிவித்தார்.

தமிழக அரசுப் பணியில் பல்வேறு துறைகளுக்கான ஊழியர்களும், அலுவலர்களும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தேர்வுசெய்யப்படுகிறார்கள். ஓராண்டில் என்னென்ன பணிகளுக்கு என்னென்ன தேர்வுகள் நடக்கின்றன? அதற்கான அறிவிப்புகள் எப்போது வெளியாகும்? தேர்வுகள், தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்? என்பன உள்ளிட்ட விவரங்களை கொண்ட வருடாந்திர தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

இந்த நிலையில், 2018-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு காலஅட்டவணையில் இடம்பெற்ற பல்வேறு தேர்வுகளுக்கான அறிவிப்புகள் திட்டமிட்டபடி குறித்த காலத்தில் வெளியிடப்படவில்லை. ஃபாரஸ்ட் அப்ரடண்டீஸ் தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் 3-வது வாரத்திலும், உதவி சிஸ்டம் என்ஜினியர், உதவி சிஸ்டம் அனலிஸ்ட் தேர்வுகளுக்கான அறிவிப்பு ஏப்ரல் முதல் வாரத்திலும், மீன்வள ஆய்வாளர், மீன்வள உதவி ஆய்வாளர் பணி தேர்வுகளுக்கான அறிவிப்பு ஏப்ரல் 2-வது வாரத்திலும், அரசு உதவி வழக்கறிஞர் தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் 3-வது வாரத்திலும், குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு மே முதல் வாரத்திலும் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரையில் அந்த தேர்வுகளுக்கு அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை.

வருடாந்திர தேர்வு காலஅட்டவணையில் இடம்பெற்றுள்ள தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் குறித்து டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "வருடாந்திர தேர்வு காலஅட்டவணையில் இடம்பெற்று மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அறிவிப்பு வெளியிடப்பட வேண்டிய அனைத்து தேர்வுகளுக்கான அறிவிப்புகளும் ஜுன் மாதம் 15-ம் தேதிக்குள் வெளியிடப்பட்டுவிடும்.

அதன்பிறகு இதர தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வருடாந்திர தேர்வு காலஅட்டவணையில் உள்ளபடி குறித்த காலத்தில் வெளியிடப்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x