

பாமக நிறுவனர் ராமதாஸின் சகோதரி சுப்புலட்சுமி, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்தில் வசித்து வந்தார். அவர் சிறிது காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு டாக்டர் பரசுராமன் என்ற மகனும், விஜயலட்சுமி, குணவதி, கனிமொழி ஆகிய 3 மகள்களும் உள்ளனர். அவருடைய கணவர் ஜெயராமன் சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.
சுப்புலட்சுமி - ஜெயராமன் சென்னையில் வசித்தபோது, அவர்களின் இல்லத்தில் தங்கியிருந்துதான் ராமதாஸ் தன்னுடைய இடைநிலைக் கல்வியை நிறைவு செய்தார். சகோதரி மீது அன்பு கொண்ட ராமதாஸ், அவரது உடலுக்கு கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார். சுப்புலட்சுமியின் இறுதிச் சடங்கு இன்று காலை ராமதாஸின் சொந்த ஊரான கீழ்சிவிறியில் நடைபெறுகிறது என்று பாமக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.