சபாநாயகருக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு

சபாநாயகர் அப்பாவு | கோப்புப்படம்
சபாநாயகர் அப்பாவு | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: அதிமுக எம்எல்ஏ-க்கள் குறித்து பேசியதாக பேரவைத் தலைவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

சென்னையில் கடந்தாண்டு நடைபெற்ற புத்தக வெளியீட்டு ஒன்றில் பேசிய சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த நேரத்தில் 40 அதிமுக எம்எல்ஏ-க்கள் திமுகவில் இணையத் தயாராக இருந்ததாகவும், ஆனால் அதை திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்க மறுத்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். பேரவைத் தலைவரின் இந்த பேச்சு அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகக் கூறி பேரவைத் தலைவர் மு.அப்பாவு-வுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளரான ஆர்.எம்.பாபு முருகவேல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் பேரவைத் தலைவர் அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பாக இன்று (அக்.22) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அப்பாவு தரப்பில் ஆஜரான மூத்த வக்கறிஞர் பி. வில்சன், “அதிமுகவைச் சேர்ந்த 40 எம்எல்ஏ-க்கள் திமுகவில் இணையத் தயாராக இருந்ததாக பேரவைத் தலைவர் கூறியது ஒரு தகவல் தானேயன்றி, அது அவதூறு ஆகாது. பேரவைத் தலைவரின் இந்த பேச்சு அதிமுகவுக்கோ அல்லது மனுதாரரான பாபு முருகவேலுவுக்கோ எந்த வகையிலும் எதிரானது அல்ல. பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட 40 எம்எல்ஏ-க்கள் தான் வழக்குத் தொடர முடியும். ஆனால், அதற்கும் யாருடைய பெயரையும் குறிப்பிட்டு அவர் பேசவில்லை.

முன்னாள் முதல்வரான ஜெயலலிதா இறந்த நேரத்தில் மனுதாரர் அதிமுகவிலேயே கிடையாது. அப்போது அவர் மற்றொரு கட்சியில் அங்கம் வகித்தார். எனவே, இந்த அவதூறு வழக்கைத் தொடர அவருக்கு தார்மீக ரீதியில் எந்த உரிமையும் இல்லை என்பதால் இந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என வாதிட்டார். புகார்தாரரான பாபு முருகவேல் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், “பேரவைத் தலைவரின் இந்த பேச்சு நிச்சயமாக அதிமுகவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது.

புகார்தாரர் அதிமுகவின் சாதாரண உறுப்பினர் கிடையாது. வழக்கறிஞர் அணியின் இணைச் செயலாளராகவும், செய்தித் தொடர்பாளராகவும் உள்ள அவர் இந்த வழக்கைத் தொடர எந்த உரிமையும் இல்லை எனக்கூற முடியாது” என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி அப்பாவு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in