

சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் மக்களின் பொது போக்குவரத்தில் மின்சார ரயில் சேவை முக்கியப் பங்கு வகிக்கிறது. மின்சார ரயில் சேவையை பொறுத்தவரை, சென்னை ரயில்வே கோட்டத்தின் கீழ், சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை - தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினசரி இயக்கப்படும் 250-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் 160 புறநகர் ரயில் நிலையங்களை தொட்டுச் செல்கின்றன. இவற்றில் ஒரு நிலையமாக, சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் உள்ளது. இந்த நிலையத்தில் முறையாக பராமரிப்பு இன்மை, பாதுகாப்பு குறைபாடு ஆகியவற்றால், பயணிகள் சிரமத்தை சந்திக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை - தாம்பரம் மார்க்கத்தில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அமைந்துள்ளது. நுங்கம்பாக்கம், சூளைமேடு, எம்எம்டிஏ காலனி உட்பட சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கும், லயோலா கல்லூரிக்கு வந்துசெல்லும் மாணவர்களுக்கும் இந்த ரயில் நிலையம் பேருதவியாக இருக்கிறது. இங்கிருந்து மின்சார ரயில்கள் மூலமாக பல்வேறு பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் பயணிக்கின்றனர். இதுதவிர, பல்வேறு பகுதிகளில் இருந்தும் நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்துக்கு மக்கள் வருகின்றனர். இதனால், இந்த ரயில் நிலையம் காலை, மாலை வேளைகளில் பரபரப்பாக காணப்படும். பயணிகள் வருகை அதிகரிப்பால், ரயில்வேக்கு வருவாயும் உயர்ந்து வருகிறது.
2023-24-ம் நிதியாண்டில், இந்த ரயில் நிலையத்தில் 53 லட்சத்து 43 ஆயிரத்து 894 பேர் முன்பதிவில்லாத டிக்கெட் பெற்றுள்ளனர். இதன்மூலமாக ரயில்வேக்கு ரூ.3 கோடியே 44 லட்சத்து 89 ஆயிரம் வருவாய் கிடைத்துள்ளது. எனினும், பயணிகள் வரத்தும், வருவாயும் அதிகரித்து வரும் இந்த ரயில் நிலையத்தை முறையாக பராமரிக்கவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ரயில் நிலையத்தின் நடைமேடையில் ஆங்காங்கே பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் சிதறி கிடக்கின்றன. இதுதவிர, ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் அமரும் இருக்கைகள் பராமரிப்பு இன்றி உள்ளன.
நடைமேடையில் இருக்கும் சில மின்விசிறிகளும் இயங்காமல் பெயரளவுக்கு தான் உள்ளன. ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடையில் கழிப்பறை வசதி இல்லாததால், பயணிகள் இயற்கை உபாதையை கழிக்க கூட இடம் தேடி அலையும் நிலை உள்ளது. இதுபோல, பல்வேறு குறைபாடுகளால் பயணிகள் அசவுகரியத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சுவாதி கொலை வழக்கு: இந்த ரயில்நிலையத்தில் 2016-ம் ஆண்டில் சுவாதி என்ற மென்பொறியாளர் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்கு பிறகு, நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் பாதுகாப்பு பற்றி பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், அந்த பேச்சு சிறிது காலத்தில் மறைந்துபோனது. தற்போது வரை பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது. ரயில் நிலையத்தின் உள்பகுதியில் போதிய கண்காணிப்பு கேமரா வசதி இல்லை. ரயில் நிலையத்தின் நடைமேடைகளில் காலை, மாலை நேரத்தில் சில ஆர்பிஎஃப் காவலர்கள் வந்து செல்கின்றனர்.
அதே நேரத்தில், இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் ஆர்பிஎஃப் காவலர்கள் இல்லாததால், ஆள் நடமாட்டம் குறைந்து பெண்கள் ஒருவித பயத்துடன் பயணிக்கும் நிலை காணப்படுகிறது. மேலும், வெளிப்பகுதியில் இருந்து சிலர் ரயில் நிலையத்துக்குள் நுழைந்து, மது அருந்திவிட்டு, பயணிகள் அமரும் இருக்கைகளை ஆக்கிரமித்து போதையில் தூங்கி வருகின்றனர். இவர்களை அப்புறப்படுத்த காவலர்கள் இருப்பதில்லை. இதனால், பெண் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறி வருகிறது. எனவே, இந்த ரயில் நிலையத்தை முறையாக பராமரிக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ரயில் பயணி குமார் கூறியதாவது: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தின் வெளிப்பகுதியில் இருந்து பயணிகள் உள்ளே செல்ல ஒரு மின்தூக்கி உள்ளது. அதேநேரத்தில், ரயில் நிலையத்தின் நடைமேடையில் இருந்து வெளியே வர மின்தூக்கி வசதி இல்லை. மேலும், வெளிப்பகுதியில் இருந்து உள்ளே வர பிரதான பாதையில் மின்தூக்கி வசதி இல்லை. இவற்றை அமைக்க வேண்டும். மின்தூக்கி அதிக அளவு மக்கள் பயணிக்கும் விதமாக, பெரியதாக அமைக்க வேண்டும்.
ரயில் நிலையத்தில் ஆங்காங்கே குப்பைகள் காணப்படுகிறது. இதை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். பயணிகள் அமரும் இருக்கைகள் மேம்படுத்தப்படாமல் உள்ளன. இதை சீரமைக்க வேண்டும். அதிக அளவில் அமரும் இருக்கைகள் அமைக்க வேண்டும். ரயில் நிலையத்துக்கு அதிகாலை, இரவில் வந்து செல்லும் பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக, ஆர்பிஎஃப் காவலர்கள் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் குற்றச் சம்பவம் நடைபெறாமல் தடுக்க முடியும். ரயில் நிலைய நடைமேடை பகுதியில் சிசிடிவி கேமரா நிறுவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து சென்னை ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "இந்த ரயில் நிலையத்தை முறையாக பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சிசிடிவி கேமராக்கள் போதிய அளவில் நிறுவி பாதுகாப்பை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரயில் பயணிகளுக்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும்" என்றார்.