தாம்பரம் மாநகராட்சி மன்ற கூட்டம்: ப்ளீச்சிங் பவுடர் பாக்கெட்களுடன் அதிமுகவினர் வெளிநடப்பு

தாம்பரம் மாநகராட்சியில் தங்கள் வார்டுகள் புறக்கணிக்கப்படுவதாக கூறி அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். | படம்: எம்.முத்துகணேஷ் |
தாம்பரம் மாநகராட்சியில் தங்கள் வார்டுகள் புறக்கணிக்கப்படுவதாக கூறி அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். | படம்: எம்.முத்துகணேஷ் |
Updated on
2 min read

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் வசந்தகுமாரி தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தாம்பரம் மாநகராட்சியில் உள்ள 70 வார்டுகளிலும் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை என பல உறுப்பினர்களும் ஒருமித்து குரல் எழுப்பினர்.

குறிப்பாக, தாம்பரத்தில் பாதாள சாக்கடை வீட்டு இணைப்பு கொடுக்கும் பணியை, ஒப்பந்ததாரர் சரியாக செய்வதில்லை. அவரை தொடர்புகொள்ளவும் முடியவில்லை. அதனால் அனகாபுத்தூர் போன்று தாம்பரத்திலும் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு வேறு ஒப்பந்ததாரர் மூலம் திட்டத்தை முடிக்க வேண்டும்.

மாநகராட்சியில் பசுமை உரக்கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. அவை முறையாக செயல்படுகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. உரக்கிடங்குகளை ஆய்வு செய்து அவை முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாம்பரம் - வேளச்சேரி சாலையில் சேலையூர் காவல் நிலையம் முதல் கேம்ப்ரோடு சந்திப்பு வரை அனைத்து நாட்களிலும் சாலையில் கழிவுநீர் ஓடுகிறது. இதனால் மக்கள் நாளும்தோறும் பாதிப்படைகின்றனர். பலமுறை புகார் தெரிவித்தும் இதை சரிசெய்ய அதிகாரிகள் முன்வரவில்லை. 5-வது மண்டலத்தில் உள்ள மாடம்பாக்கம் பகுதி பின்தங்கிய பகுதியாகும். அதனால், அந்த பகுதியில் கால்வாய், சாலை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என கவுன்சிலர்கள் பலர் வலியுறுத்தினர்.

தாம்பரம் மாநகராட்சி என்பது 70 வார்டுகளுக்கும் பொதுவானது. ஆனால் அதிமுக கவுன்சிலர்களின் வார்டுகளில் எந்த பணியும் நடக்கவில்லை. மக்கள் திட்டங்கள் தொடர்பாக மனு கொடுத்தாலும் அப்பணியை செய்வதில்லை. இந்த கூட்டம் மக்களுக்கான கூட்டம் போல் இல்லை; தீபாவளி பட்ஜெட் கூட்டம் போல் உள்ளது.

இந்த கூட்டத்திலிருந்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்வதாக அதிமுக எதிர்க்கட்சி தலைவர் சங்கர் கூறிவிட்டு வெளியேறினார். அப்போது அவர்கள், பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளது என சுட்டிக்காட்டும் விதமாக ப்ளீச்சிங் பவுடர் பாக்கெட்டை கையில் ஏந்தியபடி சென்றனர்.

இதேபோல் 50-வது வார்டு கடப்பேரி ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறும் 3 கால்வாய்கள் சுத்தம் செய்யப்படவில்லை. பணி செய்துவிட்டதாக அதிகாரிகள் ஏமாற்றுகிறார்களா அல்லது மேயருக்கு தெரியவில்லையா என்பது புரியவில்லை. கடப்பேரி ஏரியில் மருத்துவக் கழிவுகள் கலப்பதால் நிலத்தடி நீர் கெட்டுவிட்டது.

கழிவுநீர் கலந்த தண்ணீரைத் தான் பயன்படுத்துகிறோம். திமுக கூட்டணியில் இருந்தாலும், எனது வார்டை வேண்டும் என்றே புறக்கணித்து வருகின்றனர். இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன் எனக் கூறி மமக உறுப்பினர் யாகூப் வெளியேறினார்.

முன்னதாக, 38-வது வார்டு திருவிக நகரில் பாதாளச் சாக்கடை கசிவு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் தேங்குகிறது. அந்த இடத்தில் மோட்டார் பம்ப் பொருத்தி கழிவுநீர் வெளியேற்றப்பட்டு வந்தது. அதை அதிகாரிகள் முன்னறிவிப்பு இன்றி அகற்றிவிட்டனர். இதனால் குளம்போல் கழிவுநீர் தேங்கியது.

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தன்னை தகாத வார்த்தைகளால் பேசியதாக கவுன்சிலர் சரண்யா கண்ணீர் மல்க கூறினார். கழிவுநீர் கசிவை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததும் அறிவிப்பு இன்றி மோட்டாரை அகற்றியதுமே இப்பிரச்சினை ஏற்படக் காரணம் என அவர் குற்றம்சாட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in