

சென்னை: விசிக தலைவர் திருமாவளவனை விமர்சித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு பதிலளிக்கும் வகையில் அக்கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, ‘விசிக ஒரு நாள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தே தீரும்’ என தெரிவித்துள்ளார்.
“சமூக நீதியை பற்றி பேசுவதற்கு விசிக தலைவர் திருமாவளவனுக்கு அருகதை கிடையாது. அவர் இரட்டை வேடம் போடுகிறார். அருந்ததியர் இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் திருமாவளவன் எப்படி பட்டியலின மக்களின் தலைவராக முடியும்?” என எல்.முருகன் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்து விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 2009-ல் அன்றைய முதல்வர் கருணாநிதி, அருந்ததியர் உள்ஒதுக்கீட்டுச் சட்டத்தை கொண்டு வந்தபோது அதை ஆதரித்த இயக்கம் விசிக. அதனால்தான் இன்றுவரை அருந்ததியருக்கான உள்ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. விசிகவின் நிலைப்பாடு உள்ஒதுக்கீட்டுக்கு எதிரானதல்ல. கிரிமிலேயருக்கு எதிரானது.
பட்டியலினத்தவர்களுக்குள் கிரிமிலேயரை புகுத்தி சமூகநீதியை அழித்தொழிக்க முயற்சிக்கும் பாஜகவை விசிக அம்பலப்படுத்துவதால், எல்.முருகன் காழ்ப்புணர்ச்சியில் இவ்வாறு பேசுகிறார். இடஒதுக்கீடு குறித்து விசிகவுக்கு பாஜகவில் இருந்து யாரும் பாடம் எடுக்க முடியாது.
அருந்ததியருக்கான உள்ஒதுக்கீட்டை விசிக ஆதரித்தாலும், தொடர்ந்து அவதூறையே பரப்பி விசிகவையே பாஜக குறிவைக்கிறது. ஏனென்றால் விசிகவில்தான் அருந்ததியர் அதிகம் இருக்கின்றனர். பதவியிலும் களமாடுகிறார்கள். இந்த கோபத்தில்தான் விசிக மீது வெறுப்பை கொட்டுகிறார் எல்.முருகன். விசிக ஒரு நாள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தே தீரும். தமிழகத்தில் மட்டுமல்ல. இந்தியா முழுக்க பாஜகவை அகற்றுவது தான் விசிகவின் இலக்கு.