

திருநெல்வேலி: தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீரழிந்து விட்டது என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அதிமுக 53-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு திருநெல்வேலி புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கிசுப்பையா எம்எல்ஏ தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் பழனிசாமி பேசியதாவது: திமுக எந்த காலத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுத்ததாக சரித்திரம் இல்லை. எவ்வளவோ பிரச்சினைகளுக்கு இடையில் அதிமுக தொடங்கப்பட்டது. அப்போது முதல் இப்போது வரை போராட்டத்தை சந்தித்துக் கொண்டே இருக்கிறோம்.
அதிமுக ஆட்சியை அகற்ற சில எட்டப்பர்கள் திமுக துணையோடு எதிர்த்து வாக்களித்தார்கள். அப்படிப்பட்டவர்களையும் அதிமுகவில் சேர்த்து உயர்ந்த பதவி கொடுத்தோம். அப்போதும் அவர்களுக்கு மனம் ஆறவில்லை. வேண்டும் என்றே திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். அதிமுக ஆட்சி அமைய இவர்கள் இடையூறாக உள்ளனர். அதிமுக உடைந்துவிட்டதாக சிலர் கூறுகின்றனர். அதிமுக ஒன்றாகத்தான் இருக்கிறது.
அதிமுகவில் விசுவாசமாக இருப்பவர்கள் உயர்ந்த இடத்துக்கு வர முடியும். அதற்கு நானே சாட்சி. இல்லம் தேடிச் சென்று பதவி கொடுக்கும் ஒரே கட்சி அதிமுக.
திமுக ஆட்சிக்கு வந்து மூன்றரை லட்சம் கோடி கடன் வாங்கி விட்டனர். இந்த கடன்கள் எல்லாம் மக்கள் தலையில்தான் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. மின் கட்டணத்தை 64 சதவீதம் உயர்த்திவிட்டனர். பால் விலை, சொத்துவரி, வீட்டு வரியை 150 சதவீதம் உயர்த்திவிட்டனர். பத்திரப்பதிவு கட்டணம் மற்றும் கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்துவிட்டது. ஏழை மக்கள் இனி கனவில்தான் வீடு கட்ட முடியும்.
கஞ்சா நிறைந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் சர்வ சாதாரணமாக கஞ்சா விற்கின்றனர். கஞ்சா போதையால் கொலை, திருட்டு, வழிப்பறி நடக்காத நாளே இல்லை. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டது.
நீட் தேர்வை ரத்து செய்ய திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்தார்களா? அதிமுக ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டுவந்தோம். இப்போதைய திமுக ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட கொண்டுவர முடியவில்லை. இவ்வாறு பழனிசாமி பேசினார்.
கூட்டத்தில் அமைப்புச் செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், முருகையா பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.