Published : 21 Oct 2024 10:35 AM
Last Updated : 21 Oct 2024 10:35 AM
சேலம்: விளையாட்டு வீரர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, ரூ.7 கோடியில் 60 வீரர்கள் தங்கிப் பயிற்சி பெறும் வகையிலான விளையாட்டு விடுதி சேலத்தில் அமைக்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 707 ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பல்வேறு துறைகள் சார்பில் 3,583 பயனாளிகளுக்கு ரூ.33.26 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலத்தில் நேற்று நடந்தது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:
தமிழகத்தில் 12,525 ஊராட்சிகளுக்கு ரூ.86 கோடி மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன. இதுவரை 26 மாவட்டங்களில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற மாரியப்பன், துளசிமதி ஆகியோருக்குப் பாராட்டுகள். இவர்களைப்போல இன்னும்நிறைய வீரர்களை உருவாக்கவேண்டும் என்ற நோக்குடன், முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகிறோம். இந்தப் போட்டியில் கடந்த ஆண்டு 6 லட்சம் பேர் கலந்துகொண்ட நிலையில், நடப்பாண்டு 11 லட்சம் பேர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
100 பேருக்கு அரசு வேலை: முதல்வர் ஸ்டாலின் கடந்த 3 ஆண்டுகளில் 3,350 வீரர்களுக்கு ரூ.110 கோடி ஊக்கத்தொகை வழங்கியுள்ளார். விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில், முதல்கட்டமாக 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படஉள்ளது. மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.96 ஆயிரம் கோடி வங்கிக் கடன் வழங்கப்படுள்ளது.
சேலம் விளையாட்டு வீரர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, ரூ.7 கோடியில் 60 வீரர்கள் தங்கிப் பயிற்சி பெறும் வகையிலான விளையாட்டு விடுதி சேலத்தில் அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், அமைச்சர்கள் ராஜேந்திரன், மதிவேந்தன், சேலம் மேயர் ராமச்சந்திரன், எம்.பி.க்கள் கேஆர்என்.ராஜேஸ்குமார், டிஎம்.செல்வகணபதி, வி.எஸ்.மாதேஸ்வரன், மலையரசன், ஆ.மணி, கே.இ.பிரகாஷ், விளையாட்டுத் துறைச் செயலர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT