

பூந்தமல்லி: திருவேற்காடு-கோலடி ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றியதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சிப் பகுதியில் உள்ள கோலடி ஏரியை ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதுகுறித்த ஆய்வில் கோலடிஅன்பு நகர், செந்தமிழ் நகர் பகுதிகளில் 33 வீடுகள் ஏரியை ஆக்கிரமித்து இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, வருவாய்த் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் போலீஸ்பாதுகாப்புடன் 7 வீடுகளை அகற்றினர்.
தொடர்ந்து 2-வது நாளாக நேற்று பொக்லைன் இயந்திரங்களுடன், கோட்டாட்சியர் கற்பகம், வட்டாட்சியர் கோவிந்தராஜ் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் 75 பேர், போலீஸ் பாதுகாப்புடன் வந்தனர். அப்போது, செந்தமிழ்நகர், அன்புநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஆக்கிரமிப்புகளை அகற்றவிடமால் அதிகாரிகளை தடுத்தனர். அதனால், மக்களுக்கும், அதிகாரிகளுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து, அதிகாரிகள் மற்றும் போலீஸாரைக் கண்டித்து 300-க்கும் மேற்பட்டோர் அம்பத்தூர்-திருவேற்காடு சாலையில்மறியலில் ஈடுபட்டனர் இதையடுத்து, 200-க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், "புதிய வீடுகள் மட்டுமே தற்போது அகற்றப்படும். மற்ற ஆக்கிரமிப்புகள் கணக்கீடு செய்யப்பட்டு, முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்டு, பின்னர் அகற்றப்படும்" என தெரிவித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர், 26 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.