ராமநாதபுரம் | 2 ஆயிரம் கிலோ ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை அழித்த இளைஞர்கள்

மீன்கள் அழிப்பு
மீன்கள் அழிப்பு
Updated on
1 min read

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கண்மாயில் வளா்ந்த இரண்டு ஆயிரம் கிலோ ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை கிராம இளைஞர்கள் பிடித்து அழித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள செல்வநாயகபுரம் கிராமத்தில் உள்ள பொதுக் கண்மாய் ஒன்றில் கடந்த ஆண்டு மழை நீரில் அடித்து வரப்பட்ட ஆப்பிரிக்கன் கெழுத்தி மீன்கள் வளா்ந்து அதிகளவில் காணப்பட்டன. இதனால் கண்காயில் வளரக்கூடிய நாட்டு இனத்தைச் சார்ந்த நன்னீர் மீன்கள் உற்பத்தியாகாமல் இருந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில் கண்மாய் நீர் வற்றிய நிலையில் செல்வநாயகபுரம் கிராம இளைஞர்கள் சேற்றில் கிடந்த இரண்டு ஆயிரம் கிலோ ஆப்பிரிக்கன் கெழுத்தி மீன்களை பிடித்தனா். இந்த கெழுத்தி மீன்கள் ஒவ்வொரு மீனும் ஐந்து கிலோவுக்கு மேல் எடை கொண்டதாக இருந்தது. பின்னர் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் குழி தோண்டி மூடி அழித்தனர். ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை வளர்க்க மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. இந்த மீன்கள் காற்று சுவாச மீன்களாகும். இவை இடைவிடாமல் மீன்களை வேட்டையாடி உண்ணும் திறன் கொண்டவை. மேலும் 8 ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியது.

இதனால் இந்த மீன்கள் நீர்நிலைகளில் நுழைந்துவிட்டால், அவற்றை அழிப்பது சாத்தியமில்லாத ஒன்று. மேலும், இந்த மீன்கள் மிகக்குறைந்த அளவு தண்ணீரிலும் இனப்பெருக்கம் செய்யும் திறன் கொண்டவை. நன்னீர் மீன் இனங்களையும், அவற்றின் முட்டைகளையும் ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் உணவாக்கிக்கொள்வதால் நமது பாரம்பரிய மீன் இனங்கள் அழியும் நிலை உருவாகும்.

இந்த மீன்களை பண்ணைக் குட்டைகளிலோ, அல்லது மீன் வளர்ப்பு குளங்களிலோ வளர்த்தால் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காலங்களில் குளங்களிலிருந்து தப்பித்துவிட வாய்ப்பு உள்ளது. அவ்வாறு தப்பிச்செல்லும் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் ஏரி மற்றும் ஆறுகளில் சென்று, பிற மீன் இனங்களை அழிப்பதால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை தவிர, மற்ற பாரம்பரிய மீன் இனங்கள் அழியும் நிலை உருவாகும்.

எனவே, தடைசெய்யப்பட்ட ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை வளர்க்க தடைவிதிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி ஆப்பிரிக்க கெளுத்தி மீன் வளர்ப்பு செய்தால், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ள மீன் பண்ணையாளர்கள் அரசால் அனுமதிக்கப்பட்ட மீன்களை மீன்வளத் துறையின் ஆலோசனை பெற்று வளர்க்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in