தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் மகன் மணிமன்றவாணன் காலமானார்

தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் மகன் மணிமன்றவாணன் காலமானார்
Updated on
1 min read

சென்னை: தமிழறிஞர் தேவநேயப் பாவா ணரின் மகன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார்.

மொழி ஞாயிறு என்று போற்றப்படும் தமிழறிஞர் தேவநேயப் பாவாணரின் இளைய மகன் தே.மணி என்ற மணிமன்றவாணன் (78). இவர் பாவாணரின் இறுதிக் காலம் வரை திருமணம் செய்து கொள்ளாமல், அவரது தமிழ் பணிகளுக்கு பக்க துணையாக இருந்தவர். பாவாணரின் மறைவுக்கு பின் தனது திருமண வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர், தமிழக அரசின் இதழான ‘தமிழரசு’ மாத இதழில் பதிப்பாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவருக்கு இமானுவேல் தேவநேயன் என்ற மகன் இருக்கிறார்.

இதற்கிடையே பாவாணரின் வாழ்க்கை வரலாறைப் ‘பாவாணர் நினைவலைகள்’ என்ற நூலாகவும் எழுதி மணிமன்றவாணன் வெளியிட்டார். தொடர்ந்து பாவாணர் இறுதியாக பணியாற்றிய சென்னையில் அவருக்கு சிலை வைத்து பெருமைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அதை ஏற்று, அரசின் சார்பில் பாவாணருக்கு சென்னையிலே மணிமண்டபமும், சிலையும் வைப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மணிமன்ற வாணன் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மாலை சென்னையில் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மேற்கு கலைஞர் நகர், புதுச்சேரி அரசு விருந்தினர் இல்லம் எதிரில் அமைந்துள்ள பாவாணர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று (அக்.20) மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

முதல்வர் இரங்கல்: இது தொடர்பாக முதல்வர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “தமிழுக்கு தொண்டு செய்த மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் வழித்தோன்றலான மணிமன்ற வாணன் மறைவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in