

கும்பகோணம்: தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளில் 4 ஆயிரம் நிரந்தர ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கூறினார்.
கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமை வகித்து 768 மாணவர்கள், 719 மாணவிகள் என 1,487பேருக்கு பட்டங்களை வழங்கினார். முன்னதாக, செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளாக இருந்து மாற்றப்பட்ட அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் பகுதிநேர கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு நிலுவை ஊதியம் வழங்க, நிதித் துறை மற்றும் உயர்கல்வித் துறை அதிகாரிகள் பெரும்முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் இதற்கு சுமுகத் தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
அரசுக் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதால், கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டனர். எனினும், 4 ஆயிரத்துக்கும் அதிகமான நிரந்தர ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். விழாவில், கல்லூரி முதல்வர் அ.மாதவி, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுந்தரராஜன், முன்னாள் எம்.பி. ராமலிங்கம், துணை மேயர் தமிழழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.