ஓட்டேரி நல்லா உள்ளிட்ட 3 கால்வாய்களை பராமரிக்க மாநகராட்சிக்கு அதிகாரம்: அரசாணை வெளியீடு

ஓட்டேரி நல்லா உள்ளிட்ட 3 கால்வாய்களை பராமரிக்க மாநகராட்சிக்கு அதிகாரம்: அரசாணை வெளியீடு
Updated on
1 min read

சென்னை: சென்னையில் உள்ள நீர்வளத்துறைக்கு சொந்தமான ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம் கால்வாய்,வீராங்கல் ஓடை ஆகிய 3 கால்வாய்களை பராமரிக்கும் அதிகாரத்தை சென்னை மாநகராட்சிக்கு வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரப் பகுதியில் 31 நீர்வழி கால்வாய்கள் மற்றும் 28 ஏரிகள் நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ளன. இத்துறைக்குபோதிய நிதி ஒதுக்கப்படாததால், முறையான பராமரிப்பின்றி, கழிவுநீர் விடப்பட்டு, ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்படாமல், குப்பைகள் கொட்டப்பட்டு மாசுபட்டு கிடக்கிறது. இதனால் சுகாதாரக்கேடுகள் ஏற்பட்டு, அந்த நீர்வழித்தடங்களை சுற்றி வசிக்கும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

பருவமழைக் காலங்களில் கால்வாயில் மழைநீர் சீராக வெளியேறவும், சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீர் தேங்குவதை தவிர்க்கவும் கால்வாய்களில் தூர் வாருவது, கரைகள் பலப்படுத்துவது, சீரமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள நீர்வளத்துறையிடம் மாநகராட்சி நிர்வாகம் அனுமதி கேட்டு காத்திருக்கும் நிலை இருந்துவந்தது. இதனால் பணிகளில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், மாநகரப் பகுதியில் உள்ள நீர்நிலைகளை பராமரிக்கும் அதிகாரம் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுப்பெற்ற நிலையில், அது தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டது. முதல்வர் தலைமையிலும் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டன.

பின்னர், மாநகரப் பகுதியில் உள்ள ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம் கால்வாய், வீராங்கல்ஓடை ஆகிய 3 கால்வாய்களை பராமரிக்கும் அதிகாரத்தை சென்னை மாநகராட்சிக்கு வழங்கி நேற்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in