Published : 05 Jun 2018 09:56 AM
Last Updated : 05 Jun 2018 09:56 AM

நீட் தேர்வுக்கு இன்னொரு மாணவி பலி: அனிதாவை தொடர்ந்து பிரதீபா; தொடரும் தற்கொலைகள்

கடந்த ஆண்டு நீட் தேர்வுக்கு அனிதாவை பலி கொடுத்ததை அடுத்து இந்த ஆண்டு பிரதீபாவின் தற்கொலை நீட் தேர்வால் நடந்துள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெறாததால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துக்கொண்டது தமிழக்த்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ கனவுடன் படிக்கும் ஏழைக் குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் கஷ்டப்பட்டு படித்து அதிக மதிப்பெண் எடுத்து விரும்பிய மருத்துவ படிப்பை தன் திறமையால் பெற்றோருக்கு செலவு வைக்காமல் அரசு மருத்துவக்கல்லூரிகளில் பெற்றது ஒரு காலம்.

இதனால் திறமையான மாணவ, மாணவியர் கிராமபுறங்களிலிருந்து மருத்துவத்துறைக்குள் நுழைந்தனர். ஆனால் கடந்த ஆண்டு நீட் என்னும் மருத்துவ நுழைவுத்தேர்வை மத்திய அரசு அமல்படுத்தியது. இதனால் ஆயிரக்கணக்கான மாநில வழிக் கல்வியில் பயின்ற மாணவ மாணவியர் தேர்ச்சி பெற முடியாமல் மருத்துவ கனவை இழக்கும் நிலை ஏற்பட்டது.

தாம் படித்து மருத்துவர் ஆவேன் என்ற லட்சியத்துடன் போராடிய மாணவி அனிதா நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்து உயிரை மாய்த்துக்கொண்டார். அதன் பின்னர் நீட்டை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஆனாலும் மத்திய அரசு பிடிவாதமாகவே இருந்தது.

இதனால் வசதியுள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் நீட் தேர்வில் வெற்றிப்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ரூ.4 லட்சம் வரை செலவு செய்து பயிற்சி மையத்தில் சேர்த்தனர். இந்த ஆண்டும் நீட் தேர்வில் ஏகப்பட்ட குளறுபடிகள் மாணாவர்களை அடுத்த மாநிலத்திற்கு அனுப்பிய அவலம் எல்லாம் நடந்தது.

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றால் தனியார் மருத்துவகல்லூரியில் லட்சக்கணக்கில் பணம் கட்டி படிக்கவேண்டிய நிலைக்கு ஏழை மாணவர்கள் தள்ளப்பட்டதால் பலர் மருத்துவம் படிக்காமலே ஒதுங்கினர்.

இந்நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு அனிதாவை தொடர்ந்து பிரதீபா என்ற ஏழை விவசாயியின் மகள் உயிரை மாய்த்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம், பெருவளூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம்(47). கூலித்தொழிலாளி. இவரது மனைவி அமுதா(42).  இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இரண்டு பெண்கள் உள்ளனர்.

 மகன் பிரவீண்ராஜ் (21) பி.ஈ மூன்றாம் ஆண்டு படித்துவருகிறார். இன்னொரு மகள் உமா பிரியா(24) எம்.எஸ்.சி முடித்துள்ளார். தான் படிக்காவிட்டாலும் தனது பிள்ளைகள் படிக்கவேண்டும் என்று மூன்று பிள்ளைகளையும் படிக்க வைத்தார். இவரது கடைசி மகள் பிரதீபா (வயது18). இவர் சிறுவயதிலிருந்தே மருத்துவம் படிக்கவேண்டும் என்ற கனவோடு படித்து வந்தார்.

அதற்கு ஏற்றார் போல் 10-வகுப்பில் 490 மதிப்பெண் எடுத்து அசத்தினார், பெற்றோர் மகிழ்ச்சியுடன் அவரை படிக்க வைத்தனர். இவரது படிப்பு திறமையை பார்த்த மாவட்ட ஆட்சியர் அவர் மேலும் நன்றாக படிக்க ஒரு  தனியார் பள்ளியில் பிளஸ்1, பிளஸ்-2 படிக்க உதவி செய்தார். அந்த உதவியை வீணாக்காமல் கடந்த ஆண்டு பிளஸ்டூ தேர்வில் 1,125 மதிப்பெண் எடுத்தார்.

கடந்த ஆண்டு நீட் அமல்படுத்தப்பட்ட போது இவரும் தேர்வு எழுதினார் அப்போது 155 மதிப்பெண் பெற்றார். இந்த மதிப்பெண்ணுக்கு பல பத்து லட்சங்கள் கட்டி தனியார் மருத்துவகல்லூரியில் படிக்க வேண்டுமென்பதால் மருத்துவ கல்லூரியில் சேர்வது தள்ளிப்போனது.

இந்த ஆண்டும் நம்பிக்கையுடன் நீட் தேர்வை பிரதீபா எழுதினார். ஆனால் 39 மதிப்பெண் மட்டுமே பெற முடிந்தது. இதனாஅல் தனது மருத்துவ கனவு இந்த ஆண்டும் தகர்ந்ததை எண்ணி மனம் உடைந்தார் பிரதீபா.

 இதனால் மனம் உடைந்த மாணவி பிரதீபா இனியும் பெற்றோருக்கு பாரமாக இருக்க விரும்பாமல் தற்கொலை செய்ய முடிவெடுத்து நேற்று வீட்டிலிருந்த எலி மருந்தை சாப்பிட்டார். அவரை உடனடியாக் உறவினர்கள் மீட்டு திருவண்ணாமலை மருத்துமனையில் அனுமதித்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி பிரதிபா உயிரழந்தார். தனது மரணத்திற்கு முன் கடிதம் எழுதி வைத்துள்ள பிரதிபா நீட் தேர்வில் இந்த ஆண்டும் வெற்றி பெற முடியவில்லை, இனியும் தனது பெற்றோருக்கு பாரமாக இருக்கவில்லை என்று கடிதம் எழுதி வைத்துள்ளார்.

இந்நிலையில் அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பிரதிபாவின் தந்தை சண்முகம் கூறும்போது “கடந்த ஆண்டு நீட் தேர்வால் அனிதாவை இழந்தோம், இந்த ஆண்டு என் மகளை பறி கொடுத்துள்ளேன். இனியும் இந்த மரணங்கள் தொடரக்கூடாது” என்று அழுதபடி கூறினார்.

நீட் தேர்வை ரத்து செய்யும்வரை  உடலை பெறமாட்டோம் என்று பிரதிபாவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மாணவி பிரதிபாவின் மரணம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x