

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பெயரில் குடிநீர் பணியாளர்கள் சிலர் தீபாவளி பண்டிகையையொட்டி கட்டாய வசூலில் ஈடுபட்டிருப்பதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாநகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாநகரில் 3 குடிநீர் திட்டங்கள் இருந்து வந்த நிலையில், தற்போது 4-ம் குடிநீர் திட்டமும் துவங்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்கு புதிய இணைப்புகள் வழங்கும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது. மாநகரில் ஆங்காங்கே உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளில் இருந்து, சம்பந்தப்பட்ட வார்டுகளுக்கு 4 குடிநீர் திட்டங்கள் மூலம் நாள்தோறும் குடிநீர் பிரித்து அனுப்பப்படுகிறது.
இந்நிலையில், மேல்நிலைத் தொட்டிகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடும் பொறுப்பில் உள்ள மாநகராட்சி குடிநீர் பணியாளர்கள் சிலர், மாநகரில் உள்ள வீடுகளுக்குச் சென்று வீடுதோறும் கட்டாய பண வசூலில் ஈடுபட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக மாநகரைச் சேர்ந்த சிலர் கூறும்போது, “மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் திறந்துவிடுபவர்கள், தீபாவளி போனஸாக ரூ.200 கேட்டு வீடுதோறும் வசூலிக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயப்படுத்தி பணம் கேட்பது தான் தற்போது விநோதமாக இருக்கிறது.
வணிக நிறுவனங்களில் பெரும்தொகையை வசூலிக்கும் வேலையும் நடக்கிறது. பலரும் வெளியூர் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதால், வேறு வழியின்றி பணத்தைத் தருகின்றனர். சிலர் பணம் கொடுக்க மறுக்கும்போது தேவையற்ற சங்கடங்கள் ஏற்படுகிறது. குடிநீர் இணைப்பை காரணங்காட்டி, பணம் வசூலிப்பதால், பெரும்தொகை ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு வார்டுக்குள்ளும் வசூலாகிறது.
இந்தத் தொகையை யாரெல்லாம் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், ஒவ்வொரு வீதியிலும் ஏராளமான வீடுகள், நிறுவனங்கள் இருப்பதால், பெரும்தொகை வசூலிக்கப்படுவதை அறிகிறோம். திருப்பூர் மாநகரில் உள்ள 60 வார்டுகளிலும் இந்த பிரச்சினை இருப்பதாக அறிகிறோம். எனவே, தீபாவளி போனஸை பொதுமக்களிடம் கட்டாயப்படுத்தி வசூலிக்கக்கூடாது என மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட துறை வாயிலாக அனைத்து ஊழியர்களுக்கும், மாநகராட்சி மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் அனைத்து துறைகளுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
தீபாவளி பண்டிகை கட்டாய வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே இதில் சம்பந்தப்பட்ட துறையினர் கூடுதல் கவனம் செலுத்தினால் மட்டுமே, மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மீதான அதிருப்தியில் இருந்து விடுபடமுடியும்” என்றனர். இது தொடர்பாக விளக்கம் பெறுவதற்காக திருப்பூர் மாநகராட்சி ஆணையரை தொடர்பு கொண்டோம். ஆனால், அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. பொதுமக்கள் வீதிக்கு வந்து போராடும் முன்பாக மாநகராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுத்தால் நல்லது.