பிரபல செல்போன் விற்பனை நிறுவனத்தில் வரி ஏய்ப்பு புகார்: உரிமையாளர் வீட்டில் வருமானவரி சோதனை

பிரபல செல்போன் விற்பனை நிறுவனத்தில் வரி ஏய்ப்பு புகார்: உரிமையாளர் வீட்டில் வருமானவரி சோதனை
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தை தலைமையிடமாகக் கொண்டுள்ள பிரபல செல்போன் விற்பனை நிறுவனம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் செயல்பட்டு வருகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் மின்னணு பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

இந்நிலையில், இறக்குமதி செய்யப்பட்ட மின்னணு பொருட்களுக்கு சரியாக கணக்குகாட்டாமல், வரி ஏய்ப்பு செய்ததாக அந்நிறுவனத்தின் மீது புகார் எழுந்தது. இதையடுத்து, அந்நிறுவனத்தின் செயல்பாடுகளை வருமானவரித் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இதற்கிடையே, நேற்று திடீரென சென்னை கோடம்பாக்கம் யுனைடெட் காலனியில் உள்ளஅந்நிறுவனத்தின் உரிமையாளர் வீடு, பல்லாவரத்தில் உள்ள தலைமை அலுவலகம், பள்ளிக்கரணையில் உள்ள கிளை அலுவலகம் என 3 இடங்களில் 15-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கோடம்பாக்கம் வீட்டில் நேற்று காலை 7 மணி முதல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சோதனைகளில், வரி ஏய்ப்பு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்களுக்கான ஆவணங்கள், 2022-23 மற்றும் 2023-24-ம் நிதியாண்டுக்கான வரவு செலவு கணக்குகள் உள்ளிட்டவற்றை வருமான வரித் துறை அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சோதனை இரவும் தொடர்ந்தது.

வருமானவரி சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், சோதனை முழுமையாக முடிவடைந்த பிறகே வரி ஏய்ப்பு தொடர்பான விவரங்கள் தெரியவரும் என வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in