

சென்னை: தமிழ்நாடு மின் கழக கணக்காயர்களத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.சந்திரசேகரன் மின்சாரத் துறை அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 2023-ம் ஆண்டு மே 10-ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
நிலுவையில் உள்ள சில கோரிக்கைகள் குறித்து அளிக்கப்பட்ட உறுதிமொழிகளை நினைவூட்ட விரும்புகிறோம். அதன்படி, ஊதிய உயர்வு தவிர்த்த ஏனைய படிகள் குறித்து சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
வேலைப்பளு திருத்தம் குறித்து சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி 3 மாத காலத்துக்குள் ஒப்பந்தம் செய்ய வேண்டும். அத்தியாவசிய காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழிற்சங்கங்களுடன் 3 மாதங்களுக்குள் ஒருமுறை மின்சாரத் துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டு, விரைந்து ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.