Published : 18 Oct 2024 05:52 AM
Last Updated : 18 Oct 2024 05:52 AM

மழை வெள்ளத்தை திமுக அரசு அறிவியல் ரீதியாக அணுகவில்லை: முன்னாள் ஆளுநர் தமிழிசை குற்றச்சாட்டு

சென்னை: மழை வெள்ளத்தை திமுக அரசு அறிவியல் ரீதியாக அணுகவில்லை என முன்னாள் ஆளுநர் தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார். சென்னை, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ ஆலோசனை, மதிய உணவு உள்ளிட்டவற்றை முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 10 செமீ மழையிலேயே தெருக்கள் நிரம்பத் தொடங்கிவிட்டன. மேம்பாலத்தில் கார்களை நிறுத்த அவசியமில்லாத வகையில் மேம்படுத்த வேண்டியவை குறித்து திட்டமிடப்படவில்லை. துணை முதல்வர் சொல்வது போல் நீர் வடிந்திருப்பதே வெள்ளை அறிக்கை என்றால், நீர் தேங்கியிருக்கும் இடங்கள் எல்லாம் திமுக அரசு மீதான குற்ற அறிக்கையா.

30 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் நிலுவையில் இருப்பதாக முதல்வர் கூறுகிறார். ஏன் 100 சதவீத பணிகளை முடிக்கவில்லை. பிரதான சாலைகளில் நீர் அகற்றப்பட்டிருக்கிறதே தவிர, அனைத்து பகுதிகளிலும் நீர் தேங்கிதான் இருக்கிறது. கடந்த ஆண்டும் இதேபோல் அனைத்து இடங்களில் நீர் தேங்கவில்லை என முதல்வர், மேயர் ஆகியோர் அக்டோபர் மாதத்தில் கூறினர். ஆனால் டிசம்பர் மாதத்தில் அனைவரும் தத்தளித்தோம்.

இனிமேலும் விழிப்படைந்து மக்களுக்கான திட்டங்களைக் கொண்டுவராவிட்டால் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவர். மதுரையில் எம்.பியை காணவில்லை என போஸ்டர் அடித்துள்ளனர். தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் எம்பிக்களை காணவில்லை என போஸ்டர் அடிக்க வேண்டிய சூழல் வந்துள்ளது.

படம் காண்பிக்கிறார்களே தவிர, வெள்ளத்தில் இருந்து அரசு பாடம் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை. அரசியல் ரீதியாக வெள்ளத்தை அணுகுகிறார்களே தவிர, அறிவியல் ரீதியாக வெள்ளத்தை அணுகுவதில்லை. டாஸ்மாக் மது விற்பனை தொடர்பாகவே அவர்கள் கவலைப்படுகின்றனர்.

தொடர் ஆய்வு என்பது துணை முதல்வர் உதயநிதிக்கான விளம்பரம். பாஜக தொடர்ந்து களத்தில் பணியாற்றி வருகிறது. தவெக தலைவர் விஜய் தெளிவான பார்வையில் இருக்கிறாரா, வெள்ளம் தொடர்பாக அவரது நிலைப்பாடு என்ன. கட்சியினர் என்ன பணியாற்றியிருக்கின்றனர் என்பது தெரியவில்லை. அவர் நிலையற்ற தன்மை கொண்டவராக இருக்கிறார்.இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x