Published : 20 Jun 2018 07:35 AM
Last Updated : 20 Jun 2018 07:35 AM

‘ஜெ. கொள்ளையடித்த பணத்தை 18 எம்எல்ஏக்களும் பெற்றுள்ளனர்’- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் சர்ச்சை

ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை தினகரன் மூலம் 18 எம்எல்ஏக்கள் பெற்றுள்ளார்கள் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேடசந்தூரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது:

ஜெயலலிதா இறந்தவுடன் எப்படியும் இந்த ஆட்சியை கவிழ்த்துவிடவேண்டும் என ஸ்டாலின் நினைத்து தினகரனுடன் சேர்ந்து காயை நகர்த்திக்கொண்டிருந்தார். அதற்கு அவர்களுக்கு 20 எம்எல்ஏக்கள் தேவை. உடனடியாக 18 எம்எல்ஏக்கள் கிடைத்ததைக் கொண்டு ஆளுநரிடம் மனு கொடுக்கிறார்கள்.

ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டவர் தினகரன். இந்த கட்சியில் இருக்கக்கூடாது என நீக்கி வைக்கப்பட்டவர். இன்று வரை அவரை கட்சியில் சேர்க்கவில்லை. அந்த துரோகியோடு ஜெயலலிதாவால் எம்எல்ஏ ஆக்கப்பட்ட 18 பேர் பின்னால் போயிருக்கிறார்கள்.

அனைத்து எம்எல்ஏக்களையும் ஜெயலலிதா எப்படி வியர்வை சிந்தி, ரத்தத்தை சிந்தி, பணத்தை கொடுத்து எம்எல்ஏ ஆக்கினார்களோ அதைப்போலத்தான் அந்த 18 எம்எல்ஏக்களையும் ஜெயலலிதா உருவாக்கினார்.

தினகரனோடு 18 பேர் சேர்ந்து கொண்டு இன்று மகாத்மா காந்தி, புத்தரைபோல் பேசுகிறார்கள் என்றால், கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட்பவர்களுக்கு எங்கே போச்சு அறிவு என்பார்கள். ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை தினகரன் மூலம் பெற்றுக்கொண்டு அல்லது ஸ்டாலின் மூலம் வாங்கிக்கொண்டனர். இந்த சூழலை இங்குள்ள பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

18 பேர் ஸ்டாலினோடு போய்விட்டால் அடுத்த முதல்வர் ஸ்டாலின், தினகரன் துணை முதல்வர் மற்றவர்கள் எல்லாம் மந்திரி என ஒரு கற்பனை நாடகத்தை செய்து கொண்டிருந்தால், நாங்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியுமா? எனவே சட்டப்படி சபாநாயகர் 18 பேரை நீக்கியிருக்கிறார். வழக்கு போட்டு வெற்றி பெற்றால் நாங்கள் இருக்கிறோம். தோல்வியடைந்தால் நாங்கள் போகிறோம்.

18 எம்எல்ஏக்கள் விஷயத்தில் மூன்றாவது நீதிபதி என்ன சொல்கிறாரோ ஏற்றுக்கொள்ளலாம். அதன் பின் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு பண்ணலாம். அதன் பின் உச்ச நீதிமன்றத்தில் ‘புல் பெஞ்ச்’ இருக்கிறது. அதில் முறையீடு செய்யலாம். மூன்று, நான்கு ஆண்டுகள் ஆகும். ஆகட்டுமே.

ஆனால் தினகரனுக்கு தளபதியாக, தூணாக இருந்து தாங்கியதுபோல் நாடகமாடிய தங்கதமிழ்செல்வன், நான் ராஜினாமா செய்வேன். இந்த நீதியில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. இந்த நீதிமன்றத்தில் நம்பிக்கையில்லை என்று சொன்னால், உங்களையெல்லாம் லட்டுபோல் எடுத்து மறுபடியும் எம்எல்ஏவாக வைத்தால் நல்ல நீதிபதி என்பீர்கள்.

தங்கதமிழ்செல்வன் ராஜினாமா செய்கிறார் என்றால் சபாநாயகர் எடுத்த முடிவு சரி என்று அர்த்தம். அதை ஒத்துக்கொள்கிறீர்கள் என்று அர்த்தம். 8 மாதத்தில் அங்கு தலைவனாக தூக்கிவைக்கப்பட்ட தங்கதமிழ்செல்வன், தினகரனால் தூக்கி எறியப்பட்டிருக்கிறார். ஒரு மாதம், 2 மாதம் நாடகம் எத்தனை நாளைக்கு தாக்குப்பிடிக்கும். எல்லோரும் வெந்துபோய் இருக்கிறார்கள் என்றார்.

அமைச்சர் விளக்கம்

தனது சர்ச்சை பேச்சு குறித்து அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர், ஜெயலலிதாவுக்கு தெரியாமல் அவரது புகழை வைத்து கொள்ளையடித்த பணத்தை வைத்துதான் தினகரன் அரசியல் நடத்துகிறார் என்றும், அவர் கே.பழனிசாமியின் ஆட்சியை கவிழ்த்துவிட்டு ஸ்டாலினை தமிழக முதல்வராக்க எம்எல்ஏக்களை பலிகடாவாக்குகிறார் என்ற அர்த்தத்திலும்தான் அப்படி பேசினேன்” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x