Published : 17 Oct 2024 06:20 AM
Last Updated : 17 Oct 2024 06:20 AM
சென்னை: ஆழ்வார்பேட்டையில் உள்ள கஸ்தூரி எஸ்டேட் மற்றும் போயஸ் கார்டனில் உள்ள சாலைகளில் சிறு மழைக்கே தண்ணீர் தேங்குவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கஸ்தூரி எஸ்டேட் மற்றும் போயஸ் கார்டன் பகுதிகளில் அண்மைக் காலமாக சிறுமழை பெய்தாலே அப்பகுதி களில் உள்ள பல்வேறு சாலைகளில் மழை நீர் தேங்கிவிடுகிறது.
வடிகால்களால் பயனில்லை: பல மணி நேரத்துக்கு பிறகேமழைநீர் வடிகிறது. இப்பகுதி களில் மழை நீர் வடிகால்கள் புதிது புதிதாக கட்டப்படுகிறது. இருப்பினும் இப்பகுதியில் மழைநீர் வடியாமல் தேங்கிவிடுகிறது.
குறிப்பாக கஸ்தூரி ரங்கன் சாலை (சாலை முடிவு) மற்றும் கஸ்தூரி எஸ்டேட் முதல் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் சிறு மழைக்கே மழைநீர் தேங்கிவிடுகிறது.
அதேபோல், நேற்று முன்தினம் பெய்த மழையின்போதுகூட நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்குள் மழைநீர் புகுந்துவிட்டது. இதேபோன்று பல்வேறு சாலைகளிலும் மழைநீர் தேங்கி பொதுமக்கள் வெளியில் வரமுடியாத சூழல் ஏற்பட்டது.
கஸ்தூரி ரங்கன் சாலை (சாலை முடிவு) மற்றும் கஸ்தூரி எஸ்டேட் முதல் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் பெய்த மழைநீர், அன்று இரவு வரை வடியாமல் தேங்கியது. அதில் கழிவு நீரும் கலந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அப்பகுதி மக்கள் தெருக்களில் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
நிரந்தர தீர்வு காணவேண்டும்: இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, ``இப்பகுதியில் அடிக்கடி மழைநீர் தேங்குவதற்கு தீர்வுகாண்கிறோம் என்று கூறித்தான்மழைநீர் வடிகால்களை மாநகராட்சி புதிது புதிதாக கட்டி வருகிறது. அதன் பிறகும் மழைநீர்தேங்குகிறது. மயிலாப்பூரில் எங்கேயோ அடைப்பு ஏற்படுவதால், இங்கு மழைநீர், வடிகாலில் செல்லாமல் சாலைகளில் செல்வதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
பருவமழை முன்னெச்சரிக்கை என எத்தனையோ பணிகளை மேற்கொள்ளும் மாநகராட்சி, அந்த அடைப்புகளை எடுத்திருக்கலாம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், இப்பகுதியில் ஒரு சொட்டு மழைநீர்கூட தேங்கி இருக்காது. இப் பகுதியில் மழைநீர் தேங்கும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வு செய்யப்படும்: இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ``அப்பகுதியில் ஆய்வு செய்து, அங்கு மழைநீர் தேங்குவதற்கான காரணம் கண்டறிந்து, உரிய தீர்வு காணப்படும்'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT