Published : 17 Oct 2024 05:48 AM
Last Updated : 17 Oct 2024 05:48 AM
சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நிறுவனங்களுக்குள் மழைநீர் புகாமல் இருக்க வாசலில் மணல்மூட்டைகளை அடுக்கி வைத்தும், சுமார் 2 அடி உயர தடுப்புச் சுவர்எழுப்பியும் தொழில் நிறுவனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டன.
கனமழை பெய்யும்போது, சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்கள் மழை வெள்ளத்தில் தத்தளிப்பது ஒவ்வோர் ஆண்டும் தொடர் கதையாகவே இருந்து வருகிறது. கடந்த ஆண்டு மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டிப் போட்டது. தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்களில் மழைநீர் உள்ளேபுகுந்து நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டுச் சென்றது. குறிப்பாக குறு,சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்தன.
நிறுவனங்கள் கலக்கம்: அம்பத்தூர் தொழிற்பேட்டை யில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அதில் அடங்கும். அம்பத்தூர் ஏரி நிரம்பி, அதிலிருந்து வெளியேறிய உபரிநீர், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்குள் புகுந்துகோடிக்கணக்கில் நஷ்டத்தை ஏற்படுத்தியது. அந்த பாதிப்பிலி ருந்து நிறுவனங்கள் மீண்டு வருவதற்குள், அடுத்த மழைக்காலம் தொடங்கி இருக்கிறது. இதனால், இங்குள்ள பல நிறுவனங்கள் கலக்கத்தில் உள்ளன.
அம்பத்தூர் தொழிற்பேட்டை யில் சுமார் 2 ஆயிரம் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 20 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அம்பத்தூர் ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர், அம்பத்தூர் தொழிற்பேட்டை வழியாக அமைக்கப்பட்டுள்ள கால்வாய் வழியாக கொரட்டூர் ஏரிக்கு செல்கிறது. அந்த உபரிநீர், கொரட்டூர் ஏரிக்கு செல்வது தடுக்கப்படுவதால், இந்த முறையும் தொழில் நிறுவனங்களுக்குள் மழைநீர் புகும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால், அனைத்து நிறுவனங் களும், தங்களது நிறுவன வாசலில் சுமார் 2 அடி உயரத்துக்கு மணல் மூட்டைகளை இப்போதே அடுக்கிவைத்து, மழைநீர் நிறுவனங்களுக் குள் புகாமல் இருக்க முன்னெச் சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட் டுள்ளனர்.
நிறுவனங்கள் தப்பிக்க வழி: மேலும், சில நிறுவனங்கள் சுமார் 2 அடி உயர தடுப்புச் சுவரை கட்டியுள்ளன. இதுகுறித்து தொழில் நிறுவன உரிமையாளர்கள் சிலர் கூறுகையில், ``அம்பத்தூர் தொழிற்பேட்டை கால்வாயில் செல்லும் மழைநீர் எவ்வித தடங்களும் இல்லாமல், கொரட்டூர் ஏரிக்கு சென்றாலே பெரும் பாதிப்பிலிருந்து நிறுவனங்கள் தப்பிக்க முடியும். தமிழக அரசும் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT