

அரிய 1,700 சமஸ்கிருத ஓலைச்சுவடி நுண்பட சுருள்களை ஸ்கேனிங் செய்து மின்னணு வெளியீடாக (இ-பப்ளிஷிங்) வலைதளத்தில் ஏற்றிட ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.
சட்டப்பேரவையில், கலை மற்றும் பண்பாடு, அருங்காட்சியகங் கள், தொல்லியல் துறை தொடர்பான புதிய அறிவிப்புகளை அத்துறையைக் கூடுதலாக கவனிக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி செவ்வாய்க்கிழமை வெளியிட்டு பேசியதாவது:
சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கணிதம், வான சாஸ்திரம், வரலாறு உள்ளிட்ட இனங்கள் குறித்து தமிழ், சமஸ்கிருதம், மராத்தி, உருது, அரபி மற்றும் பாரசீக மொழிகளில் 72,748 ஓலைச்சுவடிகள் மற்றும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல அரிய நூல்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
அங்கு பாதுகாக்கப்பட்டு வரும் 1,700 சமஸ்கிருத ஓலைச்சுவடி நுண்பட சுருள்களை ஸ்கேனிங் செய்து, மின்னணு வெளியீடாக (இ-பப்ளிஷிங்) வலைதளத்தில் ஏற்றிட ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ரங்கம் ரங்கநாதர் கோயில் பகுதியில் ரூ.5 லட்சத்தில் பண்பாடு அகழாய்வு மேற்கொள்ளப்படும்.
அரிய கிராமியக் கலைகளை இளம் தலைமுறையினர் அறியும் வகையில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் மூலம் ஆவணமாக்கிட ரூ.10 லட்சம் நிதி ஒதுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழ் நாடங்களுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் புதிய வரலாற்று மற்றும் புராண நாடகங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்ய ரூ.7.5 லட்சம் ஒதுக்கப்படும்.
கிராமியக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் 200 பேருக்கு தலா ரூ.2 ஆயிரமும் பதிவு செய்யப்பட்ட கலைக்குழு ஒவ்வொன்றுக்கும் ரூ.6 ஆயிரம் வீதம் 100 குழுக்களுக்கும் வழங்க ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மறைந்த கலைஞர்களின் வாரிசுகளுக்கு இயல், இசை, நாடக மன்றம் மூலம் ஒருமுறை வழங்கப்படும் தொகை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.