

திருச்சி: “தமிழகத்தில் 2026-ல் மூன்றாவது அணி ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. அத்தகைய மாற்றம் வரும்போது, சனாதனத்தை பற்றி பேசியவர்கள் யோசனை செய்யக் கூடிய சூழல் உருவாகும்” என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராமகோபாலனின் 4-ம் ஆண்டு நினைவு குருபூஜையையொட்டி திருச்சியை அடுத்த குழுமணி சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் ஆத்மஜோதி பூஜை மற்றும் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதையொட்டி ராமகோபாலன் நினைவிடம் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, அங்கு இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில், இந்து முன்னணியினர் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர், பாஜகவினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதன் பிறகு காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறியது: “ராமாயணம், மகாபாரதக் கதைகளை கிராமப்புறங்களில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ராமகோபாலனின் கனவின் அடிப்படையில் சீராத்தோப்பில் கல்லூரி கட்டப்பட்டுள்ளது. அவரது நினைவிடத்தில் கட்டப்பட்டுவரும் மணிமண்டபத்தில் வருடம்தோறும் குருபூஜை மக்கள் எழுச்சியுடன் நடைபெறும்.
விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக இரு திராவிட அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்தே வருகின்றன. நடப்பாண்டு 15 லட்சம் விநாயகர் சிலைகள் வீடுகளில் வைத்து வழிபாடு செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவை தடுக்கத் தடுக்க அது மேலும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது, தொடர்ந்து இந்த அரசாங்கம் விநாயகர் சதுர்த்தி விழாவை தடைசெய்தால் இந்த அரசு காணாமல் போய்விடும்.
தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் புனரமைப்பு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கோயில்களுக்கு என தனி வாரியம் அமைக்கக் கோரியும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில் விரைவில் தீர்ப்புவரும் என நம்புகிறோம்.
தமிழகத்தில் கடவுள் நம்பிக்கை இல்லாத அரசு நடைபெற்று வருகிறது. இவர்கள் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்துவிட்டனர். தமிழகத்தில் 2026-ல் மூன்றாவது அணி ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. அத்தகைய மாற்றம் வரும்போது, சனாதனத்தை பற்றி பேசியவர்கள் யோசனை செய்யக்கூடிய சூழல் உருவாகும்” என்று அவர் தெரிவித்தார்.