கோவையில் ஒருமுறைக்கு மேல் சாலை விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் ரூ.10.15 லட்சம் அபராதம் வசூல் 

கோவை - சத்தி சாலை, கணபதி பேருந்து நிறுத்தம் அருகே செல்லும் வாகனங்கள்  | கோப்புப் படம் 
கோவை - சத்தி சாலை, கணபதி பேருந்து நிறுத்தம் அருகே செல்லும் வாகனங்கள் | கோப்புப் படம் 
Updated on
1 min read

கோவை: கோவை மாநகரில் ஒருமுறைக்கு மேல் தொடர்ந்து, சாலை போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.10 லட்சத்து 15 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கோவை மாநகர காவல்துறையினர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'கோவை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், கோவை மாநகரில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையிலும், வாகன ஓட்டிகள் சாலை விதிகளை பின்பற்றும் வகையிலும், சாலை போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை இயக்குபவர்கள் மீது மோட்டார் வாகனப் போக்குவரத்துச் சட்டப்படி அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் செல்லுதல், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து சிக்னலை மீறி வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை தொடர்ந்து ஈடுபட்டதற்காக இதுவரை 941 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அந்த வாகனங்களின் உரிமையாளர்கள் அபராதத் தொகையை ஆன்லைன் மூலமாக செலுத்திய பிறகு 901 வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து விதிகளை ஒருமுறைக்கு மேல் மீறி வாகனத்தை இயக்கியதற்காக ஆன்லைன் மூலமாக ரூ.10 லட்சத்து 15 ஆயிரத்து 500 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை இயக்குபவர்கள் மீது, மோட்டார் வாகனச் சட்டப்படி முதல் விதிமீறலுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையில், சட்டப்பிரிவுகளுக்கு ஏற்ப 2 முதல் 10 மடங்கு வரை அபராதம் விதிக்கப்படுவதுடன் வாகனங்களை பறிமுதல் செய்து, வாகன ஓட்டுநர்களின் உரிமத்தை ரத்து செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரை செய்யப்படும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in