

சென்னை: பள்ளிகளை முறையாக ஆய்வு செய்யாத வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் விளக்கம் கேட்டு தொடக்கக் கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது குறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் இன்று அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் பள்ளிகளை ஆண்டாய்வு செய்யவும், பள்ளிகளை பார்வையிட்டு மாணவர்களின் கல்வித் திறன்களை மேம்படுத்தவும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும், குறைந்தபட்சம் 12 பள்ளிகளை பார்வையிடவும், 2 பள்ளிகளில் ஆண்டாய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டது.
அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளிகளை ஆய்வு செய்த விவரங்களை கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) வாயிலாக பதிவு செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டது. அந்த விவரங்களை ஆய்வு செய்ததில் பல வட்டாரக் கல்வி அலுவலர்கள் 12-க்கும் குறைவான பள்ளிகளை நேரில் சென்று ஆய்வு செய்திருப்பது தெரிய வந்துள்ளது. பள்ளிகளை சரிவர பார்வையிடாதபட்சத்தில் மாணவர்களின் கற்றல் அறிவுத் திறன் குறையக்கூடும்.
அதனால் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்திட பள்ளி பார்வை மற்றும் ஆண்டாய்வு செய்வது மிகவும் அவசியமாகும். அந்த வகையில் 12-க்கும் குறைவான பள்ளிகளை ஆய்வு செய்த வட்டாரக் கல்வி அலுவலர்கள் 145 பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த 145 பேரில் ஓய்வு அல்லது மாறுதல் பெற்றவர்களை தவிர மற்ற வட்டாரக்கல்வி அலுவலர்கள் அனைவரும் கட்டாயம் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.