

புதுச்சேரி: காரைக்கால் கோயில் நில மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி ஆளுநரிடம் புதுச்சேரி அதிமுக மனு அளித்துள்ளது.
புதுவை மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை இன்று சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அவர் அந்த மனுவில் கூறி இருப்பதாவது: ''காரைக்கால் மாவட்டம் கோவில்பத்து கிராமத்தில் உள்ள ஸ்ரீபர்வதீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 8 ஏக்கர் நிலத்தை, அமைச்சருக்கு நெருக்கமானவர்களும், ஆளும் கட்சி உட்பட ஒரு சில அரசியல் கட்சிகளில் செல்வாக்கு மிக்கவர்களும், அரசு அதிகாரிகளும் இணைந்து கூட்டு சதி செய்து அபகரித்துள்ளனர்.
இலவச மனைப்பட்டா வழங்குவதாக வெளித் தோற்றத்தை உருவாக்கி அந்த நிலத்தை 170 மனைப் பிரிவுகளாக பிரித்துள்ளனர். இதை குறைந்த விலையில் வாங்கிய நபர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் கையூட்டு பெற்றுள்ளனர். இந்த கோயில் நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.50 கோடி. இந்த மோசடியில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள், அரசு அதிகாரிகள், அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் என அனைத்து தரப்பினரும் உள்ளனர்.
விசாரணையின் முடிவில் இந்த நிலமே கோயிலுக்குச் சொந்தமானதில்லை என எடுத்துக் கூறவும் வாய்ப்புள்ளது. எனவே, கோயிலுக்குச் சொந்தமான இடத்தை கூட்டு சதியின் மூலம் அபகரிக்க முயற்சி செய்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும்.” இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.