

திருப்பூரில் மூன்று குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டதையடுத்து, அவரது கணவர் ஞானசேகரும் வரதட்சணை கொடுமை வழக்கில் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் - தாராபுரம் சாலை, கே.செட்டிபாளையம் புதுபிள்ளையார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகர் (30). இவரது மனைவி ராஜேஸ்வரி (26). இவர்களுக்கு தருண் (3) மற்றும் கவின், கவி ஆகிய ஒன்றரை வயது இரட்டைக் குழந்தைகள் இருந்தனர். வரதட்சணை கேட்டு ராஜேஸ்வரியை கணவர் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். மேலும், அப்பகுதியிலுள்ள மகாலிங்கம், தனலட்சுமி தம்பதியரிடம் ரூ.3 லட்சத்துக்கு ராஜேஸ்வரி ஏலச்சீட்டு போட்டு வந்துள்ளார். ஆனால், பணத்தை திரும்ப வழங்காமல் தம்பதியினர் ஏமாற்றியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரி, கடந்த 25-ம் தேதி வீட்டு வளாகத்தில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் தனது மூன்று குழந்தைகளையும் வீசி கொலை செய்ததுடன், தானும் குதித்துள்ளார். ஆனால், ராஜேஸ்வரி உயிருடன் மீட்கப்பட்டார்.
இந்நிலையில், ராஜேஸ்வரியின் தாய் ஜெயலட்சுமி அளித்த புகாரின்பேரில், ஊரகப் போலீஸார் கணவர் ஞானசேகர், மகாலிங்கம் மற்றும் தனலட்சுமி ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து, முதலில் மகாலிங்கத்தின் மனைவி தனலட்சுமியை கைது செய்தனர்.
தலைமறைவாக இருந்த ராஜேஸ்வரியின் கணவர் ஞானசேகரை, திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். ஏலச்சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டு, தலைமறைவாக உள்ள மகாலிங்கத்தை தேடி வருகின்றனர்.