‘நான் உங்களுக்கு உதவலாமா?’ - அறிவிப்பு பலகை வைத்து மக்களுக்கு உதவ வேண்டும்: பொது சுகாதார துறை உத்தரவு

‘நான் உங்களுக்கு உதவலாமா?’ - அறிவிப்பு பலகை வைத்து மக்களுக்கு உதவ வேண்டும்: பொது சுகாதார துறை உத்தரவு
Updated on
1 min read

சென்னை: அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ‘நான் உங்களுக்குஉதவலாமா?’ என்ற அறிவிப்புபலகையை வைத்து, வழிக்காட்டுநரை நியமிக்க பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் 13,527 சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளிட்ட புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் சேவை, கர்ப்பகால முன்கவனிப்பு, பிரசவம், தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. பிறவி குறைபாடு, ஊட்டசத்து பற்றாக்குறை உள்ளிட்டற்றை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளித்தல், தடுப்பூசி, மற்றும் மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், ஆரம்ப சுகாதாரநிலையங்களுக்கு வரும் நோயாளிகளுக்கு உரிய முறையில் வழிகாட்ட, அனைத்து ஆரம்ப சுகாதார நிலைய நுழைவு வாயிலில், ‘நான் உங்களுக்கு உதவலாமா?’ என்ற அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். இந்த பலகை அனைவருக்கும் தெரியும்படியாக இருப்பதுடன், வழிகாட்டுநரையும் நியமிக்க வேண்டும் என பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, அனைத்து சுகாதார அலுவலர்களுக்கும் அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “‘நான் உங்களுக்கு உதவலாமா?’ என்ற வரவேற்பு மையத்தில் நியமிக்கப்படுவர், நோயாளிகளின் நிலையை அறிந்து, அவர்களுக்கு வழிகாட்டுநராக இருக்க வேண்டும். நோயாளிகளுடன் அக்கறையுடனும், நட்புடனும் பழகக்கூடியவராக இருக்க வேண்டும். காத்திருப்பு அறை, குடிநீர் வசதி, கழிப்பறை உள்ளிட்டவை இருப்பதுடன்,நோயாளிகள் அமருவதற்கான வசதி, வீல் சேர் ஆகியவற்றுடன், சாய்வுதள வசதியும் இருப்பதுஅவசியம் ஆகும். நோயாளிகளுக்கு குறை இருந்தால் அதை தெரிவிப்பதற்கான, புகார் பெட்டி அமைக்கப்பட்டிருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in