

மதுரை: அரசு மருத்துவமனையில் இடிந்துவிழுந்த மேற்கூரை சீரமைக்கப்பட்டுள்ளதாக, அரசுத் தரப்பில்உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் சில நாட்களுக்கு முன்னர் நோயாளிகள் பதிவு செய்யும் இடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது, கட்டிட இடிபாடுகள் விழுந்ததில் அங்கிருந்த கம்ப்யூட்டர் சேதமடைந்தது. எனினும், பொதுமக்கள், நோயாளிகள் யாரும் காயமடையவில்லை. இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில், நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சுந்தர்மோகன் கொண்ட உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, தாமாக முன்வந்து பொதுநல வழக்கை விசாரணைக்கு ஏற்றது.
பின்னர் நீதிபதிகள், “மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஏராளமான நோயாளிகள் வந்துசெல்கின்றனர். அங்கு மேற்கூரைஇடிந்து விழுந்ததை சாதாரணமான விஷயமாக கருத முடியாது. எனவே, அரசு ராஜாஜி மருத்துவமனை மேற்கூரை இடிந்து விழுந்தது தொடர்பாகவும், சீரமைப்புப் பணிகள் தொடர்பாகவும், தமிழக சுகாதாரத் துறைச் செயலர்,மருத்துவமனை முதல்வர், பொதுப்பணித் துறை பொறியாளர் ஆகியோர் பதில் அளி்க்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
புகைப்படத்துடன் பதில் மனு: இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கெளரி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இடிந்து விழுந்த மேற்கூரை சீரமைப்புப் பணிகள் முடிந்துவிட்டதாக அரசு ப்ளீடர் திலக்குமார், புகைப்படத்துடன் பதில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, சீரமைப்பு பணிகளின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 21-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.