

சென்னை: சென்னையில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 10 வயது சிறுவன் காயம் அடைந்துள்ளார்.
வியாசர்பாடி கல்யாணபுரம் முதல் தெருவில் வசிப்பவர் நாகப்பன். இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 4 ஆண்டுகளாக பேட்டரி வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால், வலுவிழந்த வீட்டின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இதில், நாகப்பனின் 10 வயது மகன் வெற்றி வேலுக்கு நெற்றி மற்றும் உதட்டில் பலத்த காயம் ஏற்பட்டது. தந்தை நாகப்பன், தாய் ரோஸ்லின், தம்பி சர்வின் ஆகியோர் நல்வாய்ப்பாக காயமின்றி உயிர் தப்பினர்.
காயம் அடைந்த வெற்றிவேல் உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த விபத்து குறித்து வியாசர்பாடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.